மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியில் இருந்து 11 ஆயிரம் கனஅடியாக குறைவு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியில் இருந்து 11 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Update: 2020-08-12 15:52 GMT
சேலம்,

கர்நாடக மாநிலத்தில் கடந்த வாரம் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்தது. இதனால் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகமானதால், காவிரி ஆற்றில் உபரிநீர் திறந்து விடப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 1 லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது.

இந்த தண்ணீர் தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவை கடந்து தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து கொண்டே வந்தது.

இதனிடையே கர்நாடக மாநிலத்தில் தீவிரமடைந்த பருவமழை தற்போது குறைந்துள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியில் இருந்து 11 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. இன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.31 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு - 61.41 டிஎம்சியாக உள்ளது. அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும் செய்திகள்