எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம்: அமைச்சர்கள் சொன்னது அ.தி.மு.க.வின் கருத்து கிடையாது - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேட்டி
அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமைச்சர்கள் கூறியது கட்சியின் கருத்து கிடையாது என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியே தேர்தலை சந்திப்போம் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.;
சென்னை,
அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது குறித்து அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறியது கட்சியின் கருத்து கிடையாது என்றும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவை முன்னிலைப்படுத்தியே தேர்தலை சந்திப்போம் என்றும் அமைச்சர் டி.ஜெயக்குமார் பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரம் மண்டலத்தில் கொரோனா தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அவரிடம், ‘அ.தி.மு.க.வில் அடுத்த முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திர பாலாஜி இடையே கருத்து மோதல் ஏற்பட்டது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில் வருமாறு:-
அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் விரும்புவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆட்சி. அது மீண்டும் மலரும். மலர வேண்டும். இது தான் எங்களுடைய ஒரே இலக்கு. இந்த இலக்கை நோக்கி தான் நாங்கள் பயணித்துக்கொண்டிருக்கிறோம்.
முதல்-அமைச்சர் வேட்பாளர் யார்? என்பது உரிய நேரத்தில் கட்சி முடிவு எடுக்கக்கூடிய விஷயம். எனவே இந்த நேரத்தில் அது பற்றி கருத்து சொல்வது, கட்சியை பலவீனப்படுத்துகிற செயலாக தான் இருக்கும். எனவே இதுதொடர்பாக யாரும் கருத்து கூறாமல் இருப்பது நல்லது. இந்த நேரத்தில் எதிரிகளுக்கு எந்தவிதமான வாய்ப்புகளை அளித்துவிட கூடாது என்பது தான் ஒட்டுமொத்த அ.தி.மு.க. தொண்டர்களின் எண்ணமாக இருக்கிறது.
இந்த விவகாரத்தில் அவர்கள் (அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி) சொன்னது சொந்த கருத்து. இதனை அ.தி.மு.க.வின் கருத்தாக எடுத்துக்கொள்ள முடியாது. கட்சியின் அதிகாரமிக்க ஆயுதம் செயற்குழு-பொதுக்குழு தான்.
எங்களுடைய தாரக மந்திரம் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, இரட்டை இலை சின்னத்தை முன்னிலைப்படுத்தி தேர்தலை சந்திப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இடம் பெற்று உள்ளநிலையில், இனிமேல் பா.ஜ.க. தலைமையில் தான் கூட்டணி அமையும் என்று அக்கட்சியின் துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியிருக்கிறாரே?
பதில்:- வி.பி.துரைசாமியின் கருத்து அக்கட்சியின் கருத்தா? என்று பா.ஜ.க. தேசிய தலைமை, தமிழக தலைமை சொல்லட்டும். அதன்பின்னர் எங்களுடைய பதில் கருத்தை நாங்கள் கூறுகிறோம்.
கேள்வி:- முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாகவும், தேசிய கொடியை அவமதித்ததாகவும் எஸ்.வி.சேகர் மீது புகார்கள் வந்து உள்ளதே? அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?
பதில்:- ஜெயிலுக்கு செல்ல வேண்டும் என்பது அவருடைய நீண்டநாள் ஆசை. அவருடைய ஆசையை அரசாங்கம் நிறைவேற்றி வைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.