சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டம்: சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் நேரில் ஆய்வு

சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிடபட்டுள்ளதால் சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2020-08-22 06:42 GMT
சென்னை,

தமிழகத்தில் சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் மற்றும் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் கடந்த மார்ச் மாதம் 9ம் தேதி தொடங்கிய நிலையில், கொரோனா பரவல் அதிகரிக்கத் தொடங்கியதால் மார்ச் 24ம் தேதியே அவசர அவசரமாக முடிக்கப்பட்டது.

சட்டப்பேரவை விதிகளின்படி வரும் செப்டம்பர் மாதம் 24ம் தேதிக்குள் குளிர்கால கூட்டத்தொடரைக் கூட்டுவது பற்றியும், தற்போது கொரோனா பரவலின் காரணமாக சட்டப்பேரவைக்குள் சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது சாத்தியமில்லை என்பதால், மாற்று இடத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடரைக் கூட்டலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. 

இந்தநிலையில்,  கொரோனா அச்சம் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தை கலைவாணர் அரங்கில் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  இதனையடுத்து சபாநாயகர் தனபால், சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கலைவாணர் அரங்கில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் கூட உள்ள  நிலையில் ஆய்வு மேற்கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது இருக்கும் சட்டமன்றம் சிறிய அளவிலானது என்பதால், கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத சுழல் நிலவுகிறது.

இதற்கு முன்பு  தமிழக சட்டப்பேரவை மாற்று இடங்களில் நடைபெற்றுள்ளன. அதாவது தமிழக சட்டமன்றத்தின் முதல் கூட்டம் 1952 மே மாதத்தில் இருந்து 1956 டிசம்பர் வரை தற்போதைய கலைவாணர் அரங்கத்தில் உள்ள புதிய சட்டமன்ற பேரவை மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.

அதன்பிறகு 1959 ஏப்ரல் மாதம் 20ம் தேதி முதல் 30ம் தேதி வரை 11 நாட்கள் உதகையில் உள்ள அரண்மூர் மாளிகையில் நடைபெற்றுள்ளது. ஓமந்தூரார் அரசு வளாகத்தில் புதிய சட்டப்பேரவை இயங்கியபோது, அங்கு 2010 மார்ச் முதல் 2011 மார்ச் வரையும் கூட்டத் தொடர் நடைபெற்றுள்ளது என்பது நினைவுகூறத்தக்கது.

மேலும் செய்திகள்