தேசியக் கொடியை அவமதித்ததாக வழக்கு - முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் மனு

தேசியக் கொடியை அவமதித்ததாக சென்னை காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் எஸ்.வி.சேகர் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Update: 2020-08-22 10:31 GMT
சென்னை,

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (வயது 40). தனியார் கம்பெனி ஒன்றில் அதிகாரியாக வேலை செய்கிறார். இவர் நடிகர் எஸ்.வி.சேகர் மீது புகார் கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு ஆன்லைன் மூலம் மனு ஒன்றை அனுப்பிவைத்தார். 

அந்த மனுவில், நடிகர் எஸ்.வி.சேகர், யூ-டியூப் சேனல் ஒன்றில் இந்திய தேசியக்கொடியை அவமதித்து வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் என்றும், அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மீது சென்னை மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேசிய கொடியை அவமதித்ததாக அவர் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னைக் கைது செய்யக்கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் ஆகஸ்ட் 24-ம் தேதி (திங்கட்கிழமை) விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்