கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் உறுப்பினர் வசந்தகுமார் எம்.பி. மரணம் - பிரதமர் மோடி, தலைவர்கள் இரங்கல்

கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

Update: 2020-08-29 00:15 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் நோய்த்தொற்றுக்கு ஆளாகி வருகிறார்கள். தமிழக காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவரும், கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யுமான எச்.வசந்தகுமாருக்கும் (வயது 70), அவருடைய மனைவி தமிழ்ச்செல்விக்கும், உதவியாளர் கோபிக்கும் அறிகுறியற்ற கொரோனா தொற்று ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து வசந்தகுமாரும், அவருடைய மனைவி தமிழ்ச்செல்வியும் சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த 10-ந் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் வசந்தகுமாரின் உடல்நிலை நேற்று மாலை மிகவும் மோசம் அடைந்தது. அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இதுகுறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரியின் மருத்துவ சேவைகள் இயக்குனர் டாக்டர் ஆர்.கே.வெங்கடாசலம் வெளியிட்ட மருத்துவ குறிப்பில், அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வசந்தகுமார் எம்.பி.க்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும், இருந்தபோதிலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வசந்தகுமார் எம்.பி. மாலை 6.56 மணிக்கு மரணம் அடைந்தார். இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகம் அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.

தமிழகத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி சமீபத்தில் மரணம் அடைந்தார். அவரை தொடர்ந்து நேற்று வசந்தகுமார் எம்.பி. மரணம் அடைந்து உள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த முதல் எம்.பி. வசந்தகுமார் என்பது குறிப்பிடத்தக்கது.

வசந்தகுமார் எம்.பி.யின் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி மற்றும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

பிரதமர் மோடி, வசந்தகுமாருடன் தான் இருக்கும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டு இரங்கல் தெரிவித்து இருக்கிறார். அதில், நாடாளுமன்ற உறுப்பினர் எச்.வசந்தகுமார் மரணம் அடைந்தது பற்றிய தகவல் அறிந்ததும் துயரம் அடைந்தேன். வர்த்தகத்திலும், சமூகசேவையிலும் வசந்தகுமாரின் பங்களிப்பு முக்கியமானது. நான் அவருடன் கலந்துரையாடியபோதெல்லாம் தமிழகத்தின் வளர்ச்சியில் அவருக்கு இருந்த அக்கறையை அறிந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், ஆதரவாளர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று கூறி உள்ளார்.

மரணம் அடைந்த வசந்தகுமாரின் வாழ்க்கை வரலாறு வருமாறு:-

வசந்தகுமாரின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அகஸ்தீஸ்வரம் ஆகும். இவர் ஹரிகிருஷ்ணன் நாடார்-தங்கம்மாள் தம்பதியருக்கு 1950-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மகனாக பிறந்தார். எம்.ஏ. முதுகலை பட்டப்படிப்பு படித்தவர்.

வி.ஜி.பி. நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். சைக்கிளில் வீடு, வீடாக சென்று பொருட்களை தவணை முறையில் விற்பனை செய்து வந்தார். தனது உழைப்பு, விடாமுயற்சியால் படிப்படியாக உயர்ந்து 1978-ம் ஆண்டு வீட்டு உபயோக விற்பனை கடைகளை தொடங்கினார்.

‘வசந்த் அன்ட் கோ’ என்று தனது பெயரிலேயே அவர் தொடங்கிய இந்த நிறுவனத்தின் கிளைகள் இன்றைக்கு தமிழகம் மட்டுமின்றி பெங்களூரு, புதுச்சேரி போன்ற மாநிலங்களிலும் பரந்து விரிந்து உள்ளது. தனது சிரிப்பையே ‘வசந்த் அன்ட் கோ’ விளம்பர பிராண்டாக வசந்தகுமார் மாற்றினார்.

சிறந்த தொழில் அதிபராக மட்டுமின்றி சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் என்று பன்முகத் திறமைக்கு சொந்தக்காரராக வசந்தகுமார் திகழ்ந்தார். வாழ்க்கையில் கஷ்டப்பட்டு படிபடியாக முன்னேறியது தொடர்பாக ‘வெற்றிக் கொடிகட்டு’ என்ற தலைப்பில் அவர் சுயசரிதையும் எழுதினார். இந்த சுயசரிதை புத்தகத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் இணைந்து வெளியிட்டார்.

வசந்தகுமார் 2008-ம் ஆண்டு வசந்த் டி.வி.யை ஆரம்பித்தார். இந்த தொலைக்காட்சி மூலம் இளைஞர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையிலும், தேசப்பற்றை ஊக்குவிக்கும் வகையிலும் சிறப்பு சொற்பொழிவை நிகழ்த்தி வந்தார்.

வசந்தகுமார் பெருந்தலைவர் காமராஜரால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தார். காங்கிரஸ் கட்சியில் அடிப்படை உறுப்பினராக சேர்ந்து வர்த்தக பிரிவு தலைவர், துணை தலைவர், செயல் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகளை வகித்து உள்ளார். காங்கிரஸ் கட்சி சார்பில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக்கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று வந்தார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் 2006 மற்றும் 2016-ம் ஆண்டுகள் நடந்த சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாங்குநேரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று, 2 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். நாங்குநேரி தொகுதி எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு எம்.பி. யாக எச்.வசந்தகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டவுடன் கன்னியாகுமரி தொகுதி வளர்ச்சிக்காக அரும்பாடுபட்டார். தனது தொகுதி மேம்பாட்டுக்காக மத்திய மந்திரிகளுக்கு கடிதம் வாயிலாக கோரிக்கைகள் அனுப்பி வந்தார். நாடாளுமன்றத்தில் அதிக கேள்விகளை எழுப்பிய எம்.பி. என்ற பாராட்டை பெற்றவர். கொரோனா காலத்திலும் கட்சி தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் தவறாமல் பங்கேற்று வந்தார்.

மரணமடைந்த எச்.வசந்தகுமாருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், விஜய் வசந்த், வினோத்குமார் ஆகிய 2 மகன்களும், தங்கமலர் என்ற மகளும் உள்ளனர். இதில் விஜய் வசந்த் திரைப்பட நடிகர் ஆவார். சென்னை-28, நாடோடிகள் போன்ற பல படங்களில் நடித்து உள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், இலக்கியவாதியுமான குமரி அனந்தன் இவரது சகோதரர் ஆவார். தெலுங்கானா கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு வசந்தகுமார்சித்தப்பா ஆவார்.

மேலும் செய்திகள்