கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும் விலக்கு அளித்து மதிப்பெண் வழங்க வேண்டும் - மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும் தேர்வில் இருந்து விலக்கு அளித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

Update: 2020-08-29 20:01 GMT
சென்னை,

‘இறுதி செமஸ்டர் தேர்வு தவிர மற்ற செமஸ்டர் பாடங்களின் தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் மாணாக்கர்களுக்கு தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண்கள் வழங்கப்படும்’ என்று கடந்த 26-ந் தேதி அன்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்திருந்தாலும், அது ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும் பலனளிப்பதாக இல்லை என்பது மிகுந்த கவலை அளிக்கிறது.

செமஸ்டர் தேர்வு எழுத கட்டணம் செலுத்தியவர்களை மட்டுமே, தமிழக அரசால் நியமிக்கப்பட்ட உயர்மட்டக்குழுவும், முதல்-அமைச்சரும் கணக்கில் எடுத்துக்கொண்டு இந்த முடிவை எடுத்திருப்பதும் ஊரடங்கால் செமஸ்டர் தேர்வு கட்டணம் செலுத்த இயலாத மாணவர்கள் நலன்குறித்து ஆலோசனை நடத்தவில்லை என்பதும் கண்டனத்திற்குரியவை.

செமஸ்டர் தேர்வுகளுக்கான தேர்வு கட்டணம் மார்ச் மாதத்திற்குள் செலுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற நிலையில்தான் ஊரடங்கு மார்ச் மாதம் 24-ந் தேதியே அறிவிக்கப்பட்டது. ஊரடங்கின் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டன. ஏழை-எளிய, நடுத்தர மக்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கே கடுமையாக போராடிக்கொண்டிருந்த நிலையில், தங்கள் பிள்ளைகளின் தேர்வு கட்டணத்தை செலுத்த முடியாமல் தவித்தனர்.

கொரோனா பேரிடரின் இன்னலுக்கு உள்ளானதால், சில கல்லூரிகளில் 70 சதவீத மாணவர்கள்கூட செமஸ்டர் தேர்வுக்குரிய கட்டணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்கள் என்ற செய்திகள் வெளிவந்தன. “மாணவர்களிடம் இருந்து வசூலித்த தேர்வு கட்டணத்தை உடனே பல்கலைக்கழகத்திற்கு செலுத்த வேண்டும்” என்று அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டபோதுகூட பல கல்லூரிகள், “மாணவர்கள் பெரும்பாலானோர் எங்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்தவில்லை. பிறகு எப்படி நாங்கள் பல்கலைக்கழகத்திற்கு செலுத்த முடியும்?” என்று கேள்வி எழுப்பின.

கல்லூரிகள் தரப்பில் ஐகோர்ட்டிலும்கூட வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் இவைபற்றி எல்லாம் கவலைப்படாமல், அதுபற்றி ஆலோசிக்காமல், தமிழக அரசு நியமித்த உயர்மட்டக்குழு, கட்டணம் செலுத்திய மாணவர்கள் குறித்து மட்டும் பரிந்துரை செய்ததும், அதை மட்டும் அடிப்படையாக கொண்டு முதல்-அமைச்சர் முடிவு எடுத்துள்ளார். பேரிடர் நெருக்கடியில் தேர்வு கட்டணம் செலுத்த இயலாமல் போன மாணவர்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கைகழுவியிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.

நீட் தேர்வு நடத்தக்கூடாது என்று மற்ற மாநிலங்களுடன் சேர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர மறுத்ததுபோல், ஏன் கல்லூரி இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளில் கூட மாநிலப் பேரிடர் ஆணையத்தைக்கூட்டி மராட்டிய மாநில அரசு போல் தீர்மானம் நிறைவேற்றிட அஞ்சிய முதல்-அமைச்சர், செமஸ்டர் தேர்வுக்கு கட்டணம் செலுத்த இயலாமல்போன மாணவர்களையும் கண்டுகொள்ளாமல் இப்படியொரு பாரபட்சமான முடிவினை எடுத்து அறிவித்திருக்கிறார்.

இதனால் பல கல்லூரிகளில் உள்ள நூற்றுக்கணக்கான மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுடைய பெற்றோரும் மன அழுத்தத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். ஆகவே, கட்டணம் செலுத்தாத மாணவர்களின் செமஸ்டர் தேர்வுகளுக்கும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்களித்து மதிப்பெண் வழங்கிட வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்களின் எதிர்காலம் பற்றி பெற்றோரின் மனக்கவலை அதிகரித்துள்ள இந்த சூழலில், இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வுகண்டு உரிய முடிவுகளை காலதாமதமின்றி அறிவித்திடவேண்டும் என்றும், ஏற்கனவே இறுதியாண்டு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு வளாக நேர்காணல் (கேம்பஸ் இண்டர்வியூ) மூலம் வேலைவாய்ப்பு வழங்கியுள்ள நிறுவனங்கள் அந்த வேலைவாய்ப்புகளை ரத்து செய்யக்கூடாது என்று அரசின் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவுறுத்திட வேண்டும் என்றும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்