வட்டிக்கு கடன் கொடுத்த விவகாரம்: ஹர்பஜன்சிங் கொடுத்த புகாரில் முன்ஜாமீன் கேட்டு வாலிபர் மனு

வட்டிக்கு கடன் கொடுத்த விவகாரத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன்சிங் கொடுத்த புகாரில், முன்ஜாமீன் கேட்டு வாலிபர் தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு முடித்து வைத்தது.

Update: 2020-09-08 20:00 GMT
சென்னை, 

சென்னை உத்தண்டியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 37). இவரும், பிரபா சேகர் என்பவரும் பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கிடம் இருந்து கடந்த 2015-ம் ஆண்டு ரூ.4 கோடி கடன் வாங்கியுள்ளனர். இதற்காக தாழப்பூரில் உள்ள அசையா சொத்தை ஈடாக கொடுத்துள்ளனர். இந்தநிலையில், சென்னை ஐகோர்ட்டில் மகேஷ் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

2015-ம் ஆண்டு வாங்கிய ரூ.4 கோடிக்கு, ரூ.4 கோடியே 5 லட்சத்தை திருப்பிச் செலுத்தி விட்டோம். தற்போது வட்டித்தொகை குறைத்து கொள்வது குறித்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் தொகை நிரப்பாமல் வெறும் கையெழுத்து போட்ட 8 காசோலைகளை ஹர்பஜன் சிங்கிடம் கொடுத்தேன்.

கொரோனா பரவல் காரணமாக இந்த பேச்சுவார்த்தை தடைப்பட்டது. இந்த நிலையில் ஒரு காசோலையில் ரூ.25 லட்சம் நிரப்பி, அதை வங்கியில் அவர் செலுத்தியுள்ளார். ஏற்கனவே நான் காசோலைக்கு பண தர வேண்டாம் என்று வங்கிக்கு கடிதம் கொடுத்து இருந்ததால், அந்த காசோலை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் என்னை கொடுமை செய்ய வேண்டும் என்பதற்காக நான் அவரை ஏமாற்றியதாக நீலாங்கரை உதவி கமிஷனரிடம் எனக்கு எதிராக ஹர்பஜன்சிங் புகார் செய்துள்ளார்.

ஏற்கனவே கடன் தொகையில் பெரும் பகுதியை கொடுத்த பின்னர், அவரை ஏமாற்றினேன் என்ற குற்றச்சாட்டே எழவில்லை. ஆனால் இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, என்னை கைது செய்ய முயற்சிப்பதால், எனக்கு முன்ஜாமீன் வழங்கவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வக்கீல் மோகன் ஆஜராகி வாதிட்டார். போலீஸ் தரப்பில் ஆஜரான குற்றவியல் வக்கீல் முகமது ரியாஸ், “ஹர்பஜன்சிங் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் ஆரம்பக்கட்ட விசாரணையை தான் செய்து வருகின்றனர். அதற்காக நேரில் வர மனுதாரருக்கு உத்தரவிட்டனர்” என்றார். இதையடுத்து மனுவை முடித்து வைத்த நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, “போலீசாரின் ஆரம்பக்கட்ட விசாரணைக்கு மனுதாரர் ஒத்துழைக்கவேண்டும்.

புகாரின் மீது வழக்குப்பதிவு செய்யும் பட்சத்தில், மனுதாரர் மீண்டும் முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டை நாடலாம்” என்று உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்