கல்லூரி மாணவர்கள் தகுதியான வகையில் தேர்ச்சி பெற நடவடிக்கை - அரசுக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கல்லூரி மாணவர்கள் தகுதியான வகையில் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

Update: 2020-09-08 23:15 GMT
சென்னை, 

மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாட வேண்டாம் என்றும், அவர்கள் தகுதியான வகையில் தேர்ச்சி பெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா ஊரடங்கினால் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாத சூழலில் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வுகளை நடத்துவதிலும் சிக்கல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் ‘அரியர்’ தேர்வு கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு, தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தேர்வு கட்டணம்தான் அளவுகோல் என்றால், ஊரடங்கால் தேர்வு கட்டண தேதிக்கான காலக்கெடுவைத் தவறவிட்ட மாணவர்கள் பாதிப்புக்குள்ளாவதை எடுத்துரைத்து, கட்டணம் செலுத்துவதற்கான காலக்கெடுவில் தளர்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன்.

எதைச் செய்தாலும் அவசரம், அவசரமாகவும் அரைவேக்காட்டுத்தனமாகவும் செய்து, சம்பந்தப்பட்டவர்களை கடும் பாதிப்புக்குள்ளாக்கி வரும் அ.தி.மு.க. அரசு, இப்போது கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலனிலும் அதே அவசர விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது.

‘அரியர்’ தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதற்கு பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் இடம்தராது என கல்வியாளர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சூரப்பாவும், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் இதனை ஏற்கவில்லை என தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாயின.

அந்த செய்தியை மறுத்த அத்துறைக்கு சம்பந்தமே இல்லாத அமைச்சர் டி.ஜெயக்குமார், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதிமுறைப்படிதான் தேர்ச்சி பற்றி அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். அ.தி.மு.க. அரசின் உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலிடம் இருந்து எந்த கடிதமும் அரசுக்கு வரவில்லை என்றும், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தருக்கு கடிதம் வந்திருந்தால், கவுன்சிலுக்கு அவர் என்ன பதில் கடிதம் எழுதுகிறார்? என்பதை பார்க்கவேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.

அ.தி.மு.க. அமைச்சர்களின் இத்தகைய முரண்பாடான குழப்பங்கள் நிறைந்த அறிக்கைகள் வெளியாகி, மாணவர்களை பதற்றத்திற்குள்ளாக்கிய நிலையில், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எழுதிய கடிதம் தற்போது வெளியாகியுள்ளது.

அதில், ‘இறுதி ஆண்டு மாணவர்கள் தங்களின் முந்தைய செமஸ்டர் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கு தேர்வின்றி தேர்ச்சி என்கிற அறிவிப்பு ஆச்சரியமளிக்கிறது. தேர்வு நடத்தி மதிப்பெண்கள் அளிக்காமல் தேர்ச்சி என்பது ஏற்க இயலாதது; அத்தகைய மாணவர்கள், உயர் படிப்பில் மற்ற பல்கலைக்கழகங்களால் ஏற்கப்படமாட்டார்கள். தொழில் நிறுவனங்களும் அவர்களின் தகுதியை ஏற்காது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் இந்த கடிதம், மாணவர்களின் எதிர்காலம் குறித்து, அதிர்ச்சியும், கவலையும் அளிப்பதாக உள்ளது. பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலின் விதிமுறைகள் குறித்து கல்வியாளர்களிடம் உரிய ஆலோசனைகள் பெற்று பல்கலைக்கழக துணைவேந்தர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து அரசு செயல்படுகிறதா? அல்லது சுயநலமான காரணங்களுக்காக, கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்க, கபடநாடகம் ஆடுகிறதா? என்ற பொருத்தமான கேள்வி, பெற்றோர் மாணவர்கள், கல்வியாளர்கள் மனதில் எழுந்துள்ளது.

ஊரடங்கால் வழக்கமான பள்ளி, கல்லூரி படிப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன. ‘நீட்’ தேர்வு ஆன்லைன் வகுப்புகள் ஆகியவை மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வை உருவாக்கி, அவர்களின் எதிர்கால கனவுகளை சிதைக்கின்றன. இவற்றை கண்டித்து மாணவ சமுதாயத்தின் நலன்காத்திட தி.மு.க.வின் இளைஞரணியும், மாணவரணியும் இணைந்து இன்றையதினம் (நேற்று) போராட்டக்களம் கண்டு முழக்கங்கள் எழுப்பி ஆள்வோரின் செவிப்பறைகளை தட்டியுள்ளன.

இந்த நிலையில், மாணவர்களின் எதிர்காலத்துடன் தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்காமல், கல்லூரி மாணவர்களின் சூழலைக் கருத்தில் கொண்டு, நியாயமான-தகுதியான வகையில் அவர்கள் தேர்ச்சி பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டிட வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்