கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதல்: தம்பதி உள்பட 5 பேர் உடல் நசுங்கி பலி

வேப்பூர் அருகே கார்-மினிலாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் தம்பதி உள்பட 5 பேர் உடல்நசுங்கி பலியானார்கள்.

Update: 2020-09-08 21:55 GMT
வேப்பூர், 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார்பாளையத்தை சேர்ந்தவர் தேவானந்த் (வயது 35). இவரது மனைவி பரிமளா(27). இவர்களுக்கு ரேணுகாதேவி(7) என்ற மகளும், அறிவரசன்(3) என்ற மகனும் உள்ளனர். தேவானந்த் அதே பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்து நடத்தி வந்தார்.

இவர் விருத்தாசலம் மணவாளநல்லூரில் உள்ள கொளஞ்சியப்பர் கோவிலுக்கு சென்று தனது 2 குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்த திட்டமிட்டு இருந்தார். இது தொடர்பாக தனது உறவினர்களுக்கும் அவர் தெரிவித்து இருந்தார். அதன்படி தேவானந்த் தனது மனைவி , குழந்தைகள் மற்றும் உறவினர்கள் குணப்பிரியன்(19), செல்வசேகர்(32), ரேவதி(32), பவானி(15), பிரித்விசாய்(9), மணிமேகலை(55) ஆகியோருடன் ஒரு காரில் நேற்று காலை விருத்தாசலத்துக்கு புறப்பட்டார். இந்த காரை தேவானந்த் ஓட்டினார்.

இவர்களது கார், காலை 11 மணி அளவில் கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே சென்ற போது எதிரே மினிலாரி ஒன்று வேகமாக வந்தது. அப்போது காரை முந்தி சென்ற மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. அத்துடன் கார் மீதும் பயங்கரமாக மோதியது.

இந்த நேரத்தில் பின்னால் வந்த மற்றொரு கார், விபத்துக்குள்ளான காரின் மீது மோதி நின்றது. இந்த விபத்தில் தேவானந்த் ஓட்டிச்சென்ற காரும், மினிலாரியும் சுக்குநூறாக நொறுங்கின. மோட்டார் சைக்கிளும் சேதமடைந்தது.

இந்த விபத்தில் காரில் பயணம் செய்த பரிமளா, பவானி, ரேவதி மற்றும் லாரியில் பயணம் செய்த மாற்று டிரைவரான நெய்வேலி மேட்டுக்குப்பத்தை சேர்ந்த லோகநாதன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

தேவானந்த், ரேணுகாதேவி, அரிவரசன், குணப்பிரியன், செல்வசேகர், பிரித்விசாய், மணிமேகலை மற்றும் லாரி டிரைவர் நெய்வேலியை சேர்ந்த செல்வக்குமார்(38) ஆகியோர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர். விபத்துக்கு காரணமான மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் லேசான காயத்துடன், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

விபத்து பற்றி தகவல் அறிந்ததும் வேப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, படுகாயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக அனைவரும் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவானந்த் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்