கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிக்க அதிகாரிகள் நியமனம்: மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவு

கொரோனா தடுப்புக்கான வழிகாட்டி நெறிமுறைகளை மீறுவோரிடம் அபராதம் வசூலிப்பதற்காக அதிகாரிகளை நியமனம் செய்ய மாவட்ட கலெக்டர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-08 22:05 GMT
சென்னை, 

தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டத்தில் திருத்தம் செய்ய அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொரோனா தடுப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளை மீறுவதை குற்றமாக அறிவித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

அதாவது, தனிமைப்படுத்தும் விதிகளை மீறுவது, முககவசம் அணியாமல் செல்வது, பொது இடங்களில் துப்புவது, சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் இருப்பது ஆகியவை குற்றமாக கருதப்பட்டு அதற்கான அபராதமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இந்த சட்டத்தின் கீழ் அபராதம் வசூலிப்பதை உறுதி செய்ய உடனடியாக சில அதிகாரிகளுக்கு அதிகாரமளிக்க வேண்டும். அதன்படி, மாநில அளவில் பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்து (தொற்று நோய்கள்) இணை இயக்குனர், அபராதத் தொகையை வசூலிக்கும் நடவடிக்கையை கண்காணிக்கும் மாநில அளவிலான தொடர்பு அதிகாரியாக இருப்பார்.

அதுபோல மாவட்ட அளவில், சுகாதார சேவைகள் துணை இயக்குனர் தொடர்பு அதிகாரியாக செயல்படுவார். ஊரக உள்ளாட்சி அமைப்பு உள்பட கள அளவில், சுகாதார ஆய்வாளர் பதவிக்கு குறையாத பொது சுகாதாரத்துறை அலுவலர், நகராட்சிகள், மாநகராட்சிகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கள அளவில் ‘சானிடரி’ ஆய்வாளர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர், காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலர், வருவாய்த் துறையில் வருவாய் ஆய்வாளர் அந்தஸ்துக்கு குறையாத அலுவலரை நியமிக்க வேண்டும்.

அபராதம் வசூலிக்கும் போது அதற்கான ரசீதை சம்பந்தப்பட்டவரிடம் வழங்க வேண்டும். பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருந்துகள் துறை மாநில மற்றும் மாவட்ட அளவில் அந்த ரசீது புத்தகத்தை கண்காணித்து பராமரிக்கும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்