நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி வழக்கு: கைப்பற்றிய பணம், சொத்து மதிப்பு எவ்வளவு? பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

நிதி நிறுவனம் நடத்தி பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைப்பற்றிய பணம், சொத்து மதிப்பு எவ்வளவு? என்பது தொடர்பாக பதில் அளிக்கும்படி மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-09-14 21:02 GMT
மதுரை, 

ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரதீப் சக்கரவர்த்தி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ராமநாதபுரத்தில் பில்லியன் பின்டெக் எல்.எல்.பி. என்ற பெயரில் நீதிமணி, ஆனந்த் ஆகியோர் உள்பட சிலர் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர். இந்த நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் இரட்டிப்பு தொகை தருவதாக தெரிவித்தனர். இதை நம்பி 19.9.2019 அன்று ரூ.50 லட்சம் முதலீடு செய்தேன். அதற்கு உடன்படிக்கை பத்திரம், தேதி குறிப்பிடாமல் ஒரு கோடி ரூபாய் மதிப்பு உள்ள காசோலைகளை கொடுத்தனர். ஒரு ஆண்டு முடிந்ததும் காசோலையை வங்கியில் செலுத்தி பணம் எடுத்துக் கொள்ளுமாறு தெரிவித்தனர்.

ரூ.300 கோடி மோசடி

இந்தநிலையில் நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது ராமநாதபுரம் பஜார் போலீசாரும், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரும் மோசடி வழக்குபதிவு செய்தனர். நீதிமணி, ஆனந்த் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதேபோல இவர்கள் பல இடங்களில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளனர். நீதிமணி, ஆனந்த் ஆகியோர் 2 மாதத்துக்கு மேல் சிறையில் உள்ளனர். இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. இதனால் இருவரும் ஜாமீனில் வெளியில் வரவும், வெளிநாட்டுக்கு தப்பிச்செல்லவும் வாய்ப்பு உள்ளது. எனவே நீதிமணி உள்ளிட்டோர் மீதான மோசடி வழக்கை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு குறித்து ஏற்கனவே பல்வேறு உத்தரவுகளை கோர்ட்டு பிறப்பித்து இருந்தது. அதன்பேரில் இந்த விவகாரம் தொடர்பான வழக்குகள் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உள்ளன.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதி பொங்கியப்பன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல்கள் ஏ.கண்ணன், பாஸ்கர்மதுரம் ஆகியோர் ஆஜராகி, “பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ள இந்த விவகாரத்தில் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளது. எனவே இந்த விவகாரத்தை தீவிரமாக அணுக வேண்டும்” என்று வாதாடினார்கள்.

பின்னர் அரசு வக்கீல் ஆஜராகி, “இந்த மோசடி வழக்கு பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இதையடுத்து நீதிபதி, “இந்த மோசடியில் எத்தனை பேருக்கு தொடர்புள்ளது? எவ்வளவு பணம், சொத்துகள் மோசடி செய்யப்பட்டு உள்ளன? எத்தனை பேர் புகார் அளித்துள்ளனர்? கைப்பற்றிய பணம், சொத்துகளின் மதிப்பு என்ன? இதில் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கை ஐகோர்ட்டு தொடர்ந்து கண்காணிக்கும்” என்றார்.

பின்னர் இந்த மோசடி வழக்கின் விசாரணையில் ராமநாதபுரம் சப்-கலெக்டர் சுகபத்ரா, ராமநாதபுரம் மாவட்ட முந்தைய போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார், ராமநாதபுரம் துணை சூப்பிரண்டு வெள்ளைத்துரை ஆகியோர் தலையிட தடை கோரியும், இந்த 3 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரியும் பிரதீப் சக்கரவர்த்தி சார்பில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு தொடர்பாக அவர்கள் 3 பேரும் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி நீதிபதி உத்தரவிட்டார். விசாரணையை அக்டோபர் மாதம் 14-ந்தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகள்