ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கு: மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான மனுவை பொதுநல வழக்காக விசாரிக்க முடியாது- மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டுக்கு எதிரான மனுவை பொது நல வழக்காக விசாரிக்க முடியாது என மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.

Update: 2020-09-15 00:30 GMT
மதுரை, 

சாத்தான்குளம் வியாபாரிகளான ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் மரணம் சம்பந்தமாக சி.பி.ஐ. கொலை வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்தநிலையில் ராஜீவ்காந்தி என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் கடந்த ஜூன் மாதம் 19-ந்தேதி இரவு கைது செய்யப்பட்டு, மறுநாள் அவர்கள் சாத்தான்குளம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளனர். 

அப்போது அவர்களை நேரில் சந்தித்து விசாரணை நடத்தாமல், நீதிமன்ற காவலுக்கு அனுப்ப மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டு உள்ளார். அவர் சட்டப்படி ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் சந்தித்து விசாரித்து இருந்தால் உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து அவர்களை காப்பாற்றி இருக்கலாம். எனவே அவர்களை நேரில் சந்திக்காமல் சிறைக்கு அனுப்பிய மாஜிஸ்திரேட்டு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி, ஐகோர்ட்டு பதிவாளருக்கு புகார் கடிதம் அனுப்பினோம். இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததா? என்பதை முடிவு செய்ய நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் ஆகியோர் முன்பு பட்டியலிடப்பட்டது. இதை பரிசீலித்த நீதிபதிகள், அரசுப்பணியாளர் தொடர்பான மனு என்பதால் இந்த வழக்கை பொதுநல வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று உத்தரவிட்டனர்.


மேலும் செய்திகள்