"திமுக ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்" - உதயநிதி ஸ்டாலின்

"திமுக ஆட்சியில் நீட் ரத்து செய்யப்படும்" என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2020-09-19 11:17 GMT
சென்னை

சென்னை கோயம்பேட்டில் உள்ள மக்கள் பாதை என்ற அமைப்பின் தலைமையகத்தில், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் கடந்த 6 நாட்களாக நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களது போராட்டத்திற்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தார்.

இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற போது, தேர்தல் அறிக்கையில் அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளும் நீட் தேர்வை ரத்து செய்வதாக உறுதியளித்தன. திமுக-காங்கிரஸ் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ராகுல் காந்தியும், தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

ஆனால் தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக அதனை நிறைவேற்றவில்லை. தமிழக சட்டமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம், திருப்பி அளிக்கப்பட்டதை சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக அதிமுக அரசு மறைத்துள்ளது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்காக மாபெரும் போராட்டம் நடைபெற்ற போது, அப்போதைய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மத்திய அரசிடம் இது குறித்து வலியுறுத்திய பின்னர், அதற்கான அனுமதி வழங்கப்பட்டது. அந்த முதலமைச்சர் செய்ததை ஏன் இந்த முதலமைச்சரால் செய்ய முடியவில்லை?

எனவே திமுக தலைவர் ஸ்டாலின் உறுதியளித்தது போல, இன்னும் சில மாதங்களில் தேர்தலில் வெற்றி பெற்று திமுக ஆட்சிக்கு வரும் போது நீட் தேர்வு நிச்சயம் ரத்து செய்யப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்