“விவசாய படிப்புகள் தொடங்க தடையில்லா சான்று பெறுவது அவசியம்”- உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்

தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் விவசாய படிப்புகள் தொடங்க தடையில்லா சான்று பெற வேண்டியது அவசியம் என உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Update: 2020-10-06 12:08 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் விவசாய படிப்புகள் துவங்க, தமிழக அரசின் தடையில்லா சான்று பெற வேண்டும் எனவும் அரசின் தடையில்லா சான்று பெறாமல் மாணவர் சேர்க்கை நடத்த கூடாது எனவும் கடந்த ஜூலை மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து தனியார் கல்வி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அதில், விவசாய படிப்புகள் துவங்க பல்கலைக்கழக மானியக் குழுவின் அனுமதியே போதும் என்றும் தமிழக அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சாஹி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசின் தலைமை வழக்கறிஞர், விவசாயம் என்பது மாநில பட்டியலுக்கு உட்பட்டது என்பதால் விவாசயம் சார்ந்த படிப்புகள் தொடங்க கல்லூரிகளாக இருந்தாலும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களாக இருந்தாலும் அரசின் தடையில்லா சான்று பெறுவது அவசியம் என்று தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஆறு வாரங்களுக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டனர்.

மேலும் செய்திகள்