சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவர் விடுதலை: தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தல்

சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் கைதானவர் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Update: 2020-10-09 22:55 GMT
சென்னை,

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில், ‘திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே குறும்பட்டியில் 13 வயது சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு பலியானார். இந்த வழக்கில் கைதான கிருபானந்தனை, நீதிபதி விடுதலை செய்திருக்கிறார். இந்த தீர்ப்பு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. எனவே தமிழக அரசு பரிசீலனை செய்து, வழக்கை நடத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்’ என்று கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டியில் 13 வயது சிறுமியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த வழக்கில் இருந்து 19 வயது நபர் விடுதலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

சிறுமியின் படுகொலைக்கு நீதிகேட்டு அவரது குடும்பமும், சமுதாயமும் அறவழி போராட்டம் நடத்துகின்றன. அவர்களின் உணர்வை மதித்து இந்த வழக்கில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

ஆர்.சரத்குமார்

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், ‘திண்டுக்கல் மாவட்டம் குறும்பட்டி கிராமத்தை சேர்ந்த சிறுமி கடந்த ஆண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, இரக்கமற்ற முறையில் படுகொலை செய்யப்பட்ட வழக்கில், போதிய சாட்சியங்கள் இல்லை என்று கூறி கைதான கிருபானந்தன் விடுதலை செய்யப்பட்டிருப்பது ஏற்க முடியாத அதிர்ச்சிகரமான தீர்ப்பு ஆகும். தமிழக அரசு விரைந்து மேல்முறையீடு செய்து, உரிய தண்டனை பெற்று தர வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

இதே கோரிக்கையை மக்கள் நீதி மய்யம் கட்சி ஆதி திராவிடர் நல அணி செயலாளர் பூவை ஜெகதீஷ்குமார், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில செயலாளர் அகமது நவவி ஆகியோரும் வலியுறுத்தி உள்ளனர். பாலியல் குற்றங்களுக்கு தண்டனை கடுமையாக்க வேண்டும் என்று தமிழ் புரட்சி களம் கட்சி தலைவர் ஆர்.சந்திரன் ஜெயபால் அறிக்கை விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்