கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் - சத்யபிரத சாகு தகவல்

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-14 08:27 GMT
சென்னை,

வரும் ஜனவரி 1-ந் தேதியை வாக்காளராக தகுதியடையும் நாளாக (18 வயது முடிப்பவர்கள்) கணக்கிட்டு, வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான சிறப்பு சுருக்க முறை திருத்தப்பணியை மேற்கொள்ள, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்த பணியை மேற்கொள்வதற்காக, அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. அதில் வாக்காளர்கள், தங்கள் பெயர் விவரங்களை சரிபார்க்க வேண்டும்.

பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு நவம்பர் 16-ந் தேதியில் இருந்து டிசம்பர் 15-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த காலகட்டங்களில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்படும்.

அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந் தேதி இறுதி செய்யப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை வரும் ஜனவரி 20-ந் தேதி வெளியிட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகளில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு இறங்கியுள்ளார். 

இந்நிலையில்  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறியதாவது:-

தமிழக சட்டமன்ற தேர்தலில் கொரோனா பாதிப்பு இருக்கும்பட்சத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்குப்பதிவு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். 

தமிழகத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 3% பேர் உள்ளனர். விவிபேட், ஈ.வி.எம் இயந்திரம் தயார் நிலையில் உள்ளது. கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு பிப்ரவரிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்றார்.

மேலும் செய்திகள்