பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவிக்கு உற்சாக வரவேற்பு

பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2020-10-15 19:15 GMT
சென்னை, 

சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்துக்கு வந்த பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவிக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும், தங்களை வலுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.க.வும் அமைப்பு ரீதியான கூட்டங்களை தொடர்ந்து கூட்டிக்கொண்டு வருகிறது. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இந்தநிலையில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி நேற்று சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்துக்கு வந்தார். அவரை மாநிலத்தலைவர் எல்.முருகன், நடிகை குஷ்பு, துணைத்தலைவர்கள் எம்.என்.ராஜா, வி.பி.துரைசாமி, பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், அமைப்பு பொதுச்செயலாளர் கேசவவிநாயகம், பால்கனகராஜ், ஏ.என்.எஸ்.பிரசாத், சி.ராஜா உள்பட நிர்வாகிகள் வரவேற்றனர். மகளிரணியினர் பூர்ண கும்ப மரியாதை அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு சி.டி.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலைப்பிரிவு தலைவர் நடிகை காயத்ரி ரகுராம், மகளிரணி மாவட்ட தலைவர் எஸ்.லதா உள்பட மகளிரணி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து சி.டி.ரவி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகம் வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்தும் முயற்சியில் என்னால் முடிந்த சிறந்த பங்களிப்பை அளிப்பேன். தென்னிந்தியாவில் பா.ஜ.க. நிச்சயம் வலுப்பெறும். பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள். நிச்சயம் ஒரு நல்ல மாற்றம் இந்தமுறை ஏற்படுவது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத் தொடர்ந்து பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்களை சந்தித்து சி.டி.ரவி ஆலோசனை நடத்தினார். நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை தொடர்ந்து அவர் புதுச்சேரிக்கு புறப்பட்டார்.

மேலும் செய்திகள்