அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை-அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி

மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கும் என்பதால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் உயர் சிறப்பு தகுதி தேவையில்லை என்று தர்மபுரியில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

Update: 2020-10-16 21:32 GMT
தர்மபுரி, 

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அண்ணா பல்கலைக்கழகம் கல்வித்தரத்தில் சிறப்பான நிலையில் உள்ளது. இந்த பல்கலைக்கழகம் ஏற்கனவே சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகிறது. இந்த நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உயர் சிறப்பு தகுதி கோரி துணைவேந்தர் சூரப்பா விண்ணப்பித்தது குறித்து அவரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. இந்த உயர் சிறப்பு தகுதியை பெற்றால் தமிழக அரசு ஏற்கனவே நடைமுறைப்படுத்தி வரும் 69 சதவீத இடஒதுக்கீடு முறை கேள்விக்குறியாகிவிடும்.

மாணவர்கள் சேர்க்கைக்காக நுழைவுத்தேர்வு நடக்கும் சூழல் உருவாகும். மாணவர்களிடம் கல்வி கட்டணத்தை கூடுதலாக வசூலிக்கும் நிலை ஏற்படும். மாணவர்களின் கல்வி உரிமையை பாதிக்கின்ற அம்சங்கள் அதில் உள்ளதால் அண்ணா பல்கலைக்கழகத்துக்கு மத்திய அரசின் உயர் சிறப்பு தகுதி தேவையில்லை. 

தற்போது உள்ள நடைமுறையே தொடரும். பல்கலைக்கழகத்துக்கு தேவையான நிதியை தமிழக அரசே வழங்கும். மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது தொடர்பாக துணைவேந்தர் சூரப்பா அளிக்கும் விளக்கத்தின் அடிப்படையில் அவர் மீதான நடவடிக்கை குறித்து தமிழக அரசு முடிவு செய்யும். மாணவர்களின் நலனை காப்பதே தமிழக அரசின் நோக்கம். தமிழக மாணவர்களின் கல்வி உரிமை, 69 சதவீத இட ஒதுக்கீட்டு உரிமை எந்த வகையிலும் விட்டு தரப்படாது.

மத்திய அரசு தனது புதிய கல்விக்கொள்கையில் வருகிற 2035-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் தற்போது உயர்கல்வி கற்போரின் எண்ணிக்கை 49.6 சதவீதமாக உள்ளது. இந்த ஆண்டே கிட்டத்தட்ட 50 சதவீதம் என்ற நிலையை அடைந்து விட்டோம். இதன் மூலம் புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு அறிவித்துள்ள இலக்கை 15 ஆண்டுகள் முன் கூட்டியே தமிழகம் தற்போது எட்டிவிட்டது.

தமிழக அரசு உயர் கல்வித்துறையில் வெளிப்படை தன்மையோடு செயல்பட்டு வருகிறது. துணைவேந்தர் பணி என்பது 3 ஆண்டுகளுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் தமிழக அரசு அண்ணா பல்கலைக்கழகத்தின் மேம்பாட்டு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. 

அண்ணா பல்கலைக்கழகத்தில் 4 மண்டல மையங்கள், 13 உறுப்புக்கல்லூரிகள், 461 இணைப்பு கல்லூரிகள் உள்ளன. இவை அனைத்துக்குமான கல்வித்தர மேம்பாட்டு பணியில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது. பிளஸ்-2 உடனடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கள், கலை அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களில் வருகிற 31-ந்தேதிக்குள் விண்ணப்பித்து சேர்ந்து பயன் பெறலாம்.

இவ்வாறு உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கூறினார்.

மேலும் செய்திகள்