புலம் பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் - நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள்

இணையதளத்தில் புலம் பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று நிறுவனங்களுக்கு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2020-10-17 06:31 GMT
சென்னை,

தமிழகத்தில் உள்ள பல விதமான தொழிற்சாலைகளுக்கு வேலை வாய்ப்பு தேடி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து தொழிலாளர்கள் வருகின்றனர். அவ்வாறு வருபவர்களின் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டியது அவசியமாகும். தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் நிறுவனங்கள் அவற்றை பதிவு செய்ய வேண்டும்.

இந்நிலையில் தொழில் நிறுவனங்கள் புலம் பெயர்ந்த பணியாளர்களின் இணையதளத்தில் பதிவு செய்யாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதையடுத்து தமிழக அரசு இது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மாநிலங்களுக்கிடையிலான புலம் பெயர்ந்த தொழிலாளர் சட்டம், 1979-ன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்களை பணியில் அமர்த்தும் அனைத்து வேலையளிப்போரும் பணியமர்த்தப்பட்ட புலம் பெயர்ந்த பணியாளர்களின் முழு விவரங்களை உரிய அலுவலரிடம் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசால் இதற்கென பிரத்யேகமான வலைதளம் ( labour.tn.gov.in/ism ) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வலைதளத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் விவரங்களை பதிவு செய்வதை எளிமைப்படுத்தும் வகையில் அனைத்து தொழிற்சாலைகள்/ கட்டிட ஒப்பந்ததாரர்கள்/ வணிக நிறுவனங்களுக்கு தனியாக உள்நுழைவு மற்றும் கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் சில வேலையளிப்போர்கள் இதனை சரிவர பதிவு செய்யாமல் இருப்பது தெரியவருகிறது. எனவே, உடனடியாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் முழுவிவரங்களை மேற்படி வலைதளத்தில் எவ்வித விடுதலுமின்றி பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இதனை செய்யத் தவறும் பட்சத்தில் தொழிற்சாலைகள்/ கட்டிட ஒப்பந்ததாரர்கள்/ வணிக நிறுவனங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்