மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி: முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-19 11:03 GMT
சென்னை, 

கனமழை காரணமாக தெலங்கானா மாநிலத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தெலங்கானா மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 69-ஆக அதிகரித்து உள்ளது. தெலங்கானாவில் பெய்த கனமழையால் தலைநகர் ஹைதராபாத் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளது.

இந்தசூழலில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகரராவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், “தெலங்கானாவில் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு தமிழக அரசு மற்றும் தமிழக மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தமிழக அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது” என்று அதில் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்குவதாக அறிவித்துள்ள முதல்வர் பழனிசாமிக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகள் வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அண்ணன் திரு.எடப்பாடி கே.பழனிச்சாமி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்” என்று பதிவிட்டுள்ளார். 


மேலும் செய்திகள்