சென்னையில், சில மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை

சென்னையில், சில மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் கூறி உள்ளார்.

Update: 2020-10-29 04:06 GMT
சென்னை

சென்னையில் விடிய, விடிய இடைவிடாமல் பெய்யும் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக வானிலை ஆய்வு மையம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னையில் நள்ளிரவு முதல் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அண்ணா நகர், தியாகராய நகர், ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, எழும்பூர்,ராயப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், நேற்றிரவு முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், பட்டினம்பாக்கம், மயிலாப்பூர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் விடிய விடிய மழை பெய்தது. 

இதேபோல், புறநகர் பகுதிகளான தாம்பரம், பெருங்களத்தூர், பல்லாவரம், ஆவடி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்தது.

கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை இயக்க முடியாமல் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அடுத்த 2 முதல் 3 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.

வடகிழக்குப் பருவமழை தாமதமாகத் துவங்கினாலும் இயல்பான மழை கிடைப்பதற்கான சூழல்கள் இருப்பதாகச் சென்னை மண்டலம் வானிலை ஆய்வு மையம் முன்னாள் இயக்குனர் ரமணன் தெரிவித்துள்ளார்.
  
இந்நிலையில் இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப்ஜான் மழை குறித்து டுவீட் செய்துள்ளார், அதில், சென்னையில், சில மணி நேரத்தில் 150 மில்லி மீட்டர் முதல் 200 மில்லி மீட்டர் வரை மழை பெய்துள்ளது மழைநீர் வடியும் வரை இன்னும் சில மணிநேரங்களுக்கு தண்ணீர் தேங்கி இருப்பது சகஜம்தான். சென்னை மட்டுமில்லை, எந்த ஒரு நகரமாக இருந்தாலும் இத்தனை அடர்த்தியான மழையை தாக்குப்பிடிப்பது கடினம் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்