சென்னையில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள அரசு எந்திரம் தயாராக இருக்க வேண்டியது அவசியம் - டாக்டர் ராமதாஸ்

சென்னையில் வெள்ள பாதிப்பை எதிர்கொள்ள அரசு எந்திரம் தயாராக இருக்க வேண்டியது அவசியம் என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-11-18 06:42 GMT
சென்னை, 

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை எட்டிவருவதால், சென்னையில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படுமோ? என்ற அச்சமும், பதற்றமும் சென்னை மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. சென்னைக்கு உடனடியாக வெள்ள ஆபத்து இல்லை என அதிகாரிகள் அறிவித்துள்ள போதிலும், இயற்கை எந்த நேரத்திலும் எத்தகைய விளைவை வேண்டுமானாலும் ஏற்படுத்தக்கூடும் என்பதால் அதை எதிர்கொள்ள அரசு எந்திரம் தயாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.

சென்னை மற்றும் புறநகருக்கான மழை வாய்ப்புகள், ஏரிகளின் நீர்மட்டம் உயர்வு ஆகியவற்றின் அடிப்படையில் சில மணி நேரங்களுக்கு ஒருமுறை முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வு தகவல்களை வெளியிட வேண்டும். அதன் மூலம் மக்களை பதற்றமின்றி, அதே நேரத்தில் எந்த நிகழ்வுக்கும் தயார் நிலையில் அரசு வைத்திருக்க வேண்டும். பல இடங்களில் விஷமிகள் தங்களின் சுயநலனுக்காக ஏரிகளின் கரைகளை உடைக்கக்கூடும்; அதனால் பெரும் பாதிப்பு ஏற்படக்கூடும் என்பதால் அதைத் தடுக்கவும் கண்காணிப்பை பலப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்