சென்னை விமான நிலையத்தில் கடந்த 2 தினங்களில் ரூ.2.06 கோடி மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2020-11-20 16:22 GMT
சென்னை,

வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையங்களில் சோதனை செய்யும் போது சில சமயங்களில் கடத்தல் தங்கம் கைப்பற்றப்படுகிறது. இதன்படி சென்னை விமான நிலையத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 47 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் மொத்த மதிப்பு 24 கோடி என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இந்த கடத்தல் சம்பவங்களில் இதுவரை 135 பேர் கைது செய்யப்பட்டாலும், தற்போது வரை கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சுங்கத்துறை அதிகாரிகளின் தொடர் கண்காணிப்பு காரணமாக உள்ளாடைக்குள் தங்கம் கடத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது. இது போன்ற கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்த விமான நிலைய ஊழியர்கள் 7 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரு தினங்களாக துபாயில் இருந்து வந்த 6 பயணிகளிடம் இருந்து ரூ.2.06 கோடி மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்