தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும் - முதலமைச்சர் அறிவிப்பு

மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Update: 2020-11-21 10:43 GMT
சென்னை,

அரசு பள்ளிகளில் பயின்று தற்போது 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் மூலம் மருத்துவ படிப்பில் சேரக்கூட்டிய மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை உடனடியாக செலுத்தும் வகையில், தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தில் ஒரு சுழல் நிதியை உருவாக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அந்த நிதியில் இருந்து மாணவர்களுக்கான கல்வி கட்டணம், விடுதி கட்டணம் ஆகியவற்றை கல்லூரி நிர்வாகத்திற்கே நேரடியாக செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த ஆண்டு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ், 313 எம்.பி.பி.எஸ். இடங்களிலும், 92 பி.டி.எஸ். இடங்களிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தனியார் பள்ளிகளில் இடம் கிடைத்து, கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலையில் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான கல்வி உதவித்தொகை(ஸ்காலர்ஷிப்) கிடைப்பதற்கு முன்பாக, அரசே அந்த கல்வி கட்டணத்தை ஏற்க உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் ஒதுக்கப்படும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தை தி.மு.க ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்துள்ளார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி, 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான சேர்க்கை  வழங்கும் விழாவில் இது குறித்து தாம் அறிவித்ததாக முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாணவர்களுக்கு முழு அரசு உதவி கிடைக்கும் என தெரிந்த பின்பும் திமுக உதவுவதாக தெரிவித்திருப்பது அரசியல் நாடகம் என்றும், திமுகவின் அரசியல் நாடகத்தை மக்கள் நன்கு அறிவார்கள் என்றும் விமர்சித்துள்ளார்.

மேலும் செய்திகள்