பலத்த மழை காரணமாக முழு கொள்ளளவை நெருங்கியது செம்பரம்பாக்கம் ஏரி

பலத்த மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது.

Update: 2020-11-25 02:23 GMT
சென்னை, 

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகரில் பெய்துவரும் கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரி முழு கொள்ளளவை நெருங்கி உள்ளது. முழு கொள்ளளவு 24 அடி கொண்ட சென்னை செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 21.55 அடியாக தற்போது அதிகரித்துள்ளது. மழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 230 கனஅடியில் இருந்து 1,096 கனஅடியாக அதிகரித்துள்ளது. மழை தொடர்ந்து பெய்வதால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 22 அடியை விரைவில் எட்ட வாய்ப்பு உள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் இன்று முழு கொள்ளளவை எட்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல் பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மில்லியன் கனஅடி. நேற்றைய நீர் இருப்பு 1,786 மில்லியன் கனஅடி (55.28 சதவீதம்). ஏரிக்கு விநாடிக்கு 625 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சோழவரம் ஏரியின் கொள்ளளவு 1,081 மில்லியன் கனஅடி. நீர் இருப்பு 178 மில்லியன் கனஅடி (16.47 சதவீதம்). விநாடிக்கு 34 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. புழல் ஏரியின் கொள்ளளவு 3,300 மில்லியன் கனஅடி. நீர் இருப்பு 2,422 மில்லியன் கனஅடி (73.39 சதவீதம்). விநாடிக்கு 354 கனஅடி தண்ணீர் வந்துகொண்டு இருக்கிறது. கண்ணன்கோட்டை தேர்வாய்க்கண்டிகை ஏரியின் கொள்ளளவு 500 மில்லியன் கனஅடி. தற்போதைய நீர் இருப்பு 140 மில்லியன் கனஅடி (28 சதவீதம்). தற்போது மழை தொடர்ந்து பெய்வதால் நேற்று ஒரேநாளில் ஏரிகளுக்கு 67 மில்லியன் கனஅடி நீர் வந்து சேர்ந்துள்ளது. 

தொடர்மழை காரணமாக ஏரிகளின் நீர் வரத்தும் கணிசமாக அதிகரித்து வருகிறது. அதனால் ஏரிகள் நிரம்பும் நிலை ஏற்பட்டால் முன்னெச்சரிக்கையுடன் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஏரிகளைக் கண்காணிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்