உருவாகும் புரெவி புயல்: இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு

வங்கக்கடலில் உருவாக உள்ள புரெவி புயல் இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

Update: 2020-11-30 16:29 GMT
சென்னை,

வங்கக்கடலில் உருவான நிவர் புயலானது கடந்த 26 ஆம் தேதி அதிகாலை 2 மணி அளவில் கரையைக்கடந்தது. இந்தப் புயலால் புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தது. சென்னையிலும் பாதிப்பு கடுமையாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் பாதிப்பு ஓரளவு தவிர்க்கப்பட்டது.

இந்நிலையில் நிவர் புயலைத் தொடர்ந்து புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில் அந்தப் புயலுக்கு 'புரெவி' புயல் எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாக உள்ள புரெவி புயல் டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு இலங்கையின் திரிகோணமலை அருகே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 7 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. கன்னியாகுமரியில் இருந்து ஆயிரத்து 1,040 கி.மீ கிழக்கு திசையில் தற்போது நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் தொடர்ந்து வரும் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெறும்.

தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து  டிசம்பர் 2 ஆம் தேதி மாலை அல்லது இரவு கரையை கடக்கும். இலங்கையிலுள்ள திரிகோணமலைக்கு அருகே இந்த புயல் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து மேற்கு நோக்கி நகர்ந்து மூன்றாம் தேதி காலை குமரி கடலுக்கு வரும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்