அணுசக்தி துறை நிபுணர்கள் தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

அணுசக்தி துறை நிபுணர்கள் தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-12-17 13:36 GMT
மதுரை, 

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் மனுதாக்கல் ஒன்று செய்திருந்தார். அதில், தாமிரபரணி ஆற்றில் சட்டவிரோத மணல் குவாரிகளை நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி இருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. 

அப்போது, தாமிரபரணி ஆற்றை ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். அந்த வழக்கறிஞர் ஆணையரின் அறிக்கையானது இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தாமிரபரணி ஆற்று மணலில் அணுசக்தி கனிமங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து நீதிபதிகள் கனிமங்களை பாதுகாக்க வேண்டிய அரசு அதிகாரிகள், எவ்வாறு மணல் அள்ளுவதற்கு அனுமதி வழங்குகிறார்கள் என்று தெரியவில்லை கூறி, மத்திய அணுசக்தி செயலர் மற்றும் பொதுப்பணித்துறை செயலர் ஆகியோர் தாமிரபரணி ஆற்று மணலை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும், தாமிரபரணி ஆற்றில் இருந்து மணலை எடுக்கக்கூடாது. அவ்வாறு எடுத்த மணலை கட்டுமான பணிக்கு பயன்படுத்தாமல் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து, வழக்கை டிசம்பர் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்