புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் ;தேவாலயங்களில் சிறப்பு ஆராதனைகள்

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது, தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

Update: 2021-01-01 05:56 GMT
Representational image
சென்னை

புத்தாண்டை முன்னிட்டு, சென்னை, மதுரை, பிள்ளையார்பட்டி உள்ளிட்ட இடங்களில் அதிகாலையிலேயே ஏராளமானோர் கோவில்களுக்குச் சென்று குடும்பத்தினருடன் வழிபட்டனர்.  

சென்னை தியாகராயர்நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் அதிகாலையிலேயே திரளான மக்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். முன்னதாக புத்தாண்டை முன்னிட்டு இந்த ஆலயம் முழுவதும் பல வண்ண மலர்களாலும், விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் அம்மனை வழிபட்டனர். கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை கடைபிடித்த படி பக்தர்கள் நீண்ட வரிசையில் தரிசனத்திற்காக அதிகாலை முதல் காத்திருந்தனர். 

சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோவிலில், திரளானோர் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளின் படி பொது மக்கள் முக கவசம் அணிந்தும். தனிமனித இடைவெளியை கடைப்பிடித்தும் சுவாமியை தரிசித்தனர்.

மதுரை திருப்பரங்குன்றத்தில் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் புதுச்சேரி மணக்குள விநாயகர் கோவிலில் விடியற்காலை முதல் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் விநாயகரை வழிபட்டனர். 

திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயிலில் புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.          
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

வேளாங்கண்ணி பேராலயத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்வில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.பேராலய அதிபர் பிரபாகர் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி பங்கேற்றனர். தமிழ் முறைப்படி பேராலய அதிபர் மற்றும் பங்கு தந்தைகளுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய தேவாலயங்களின் ஒன்றான கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. புதிய ஆண்டில் நன்மைகள் பெருக பிரார்த்தனை நடத்தப்பட்டது.

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயம் சின்ன கோவில் தேவாலயம் போன்ற ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வெளி மாவட்டத்தில் இருந்தும் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். திருப்பலி நிறைவுற்றதும், ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து அன்பை பரிமாறிக் கொண்டனர்.

குடியாத்தம், கொடைக்கானல், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம்,மதுரை,கரூர், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

மேலும் செய்திகள்