சென்னையில் கொட்டி தீர்த்த கனமழை: ஏரிகளில் இருந்து நீர்திறப்பு; பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சென்னையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. செம்பரம்பாக்கம், புழல், பூண்டி ஏரிகளில் இருந்து நீர்திறக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2021-01-06 00:15 GMT
சென்னையில் பெய்து வரும் மழையால் புழல் ஏரி நிரம்பி முழு கொள்ளளவை எட்டியதால் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. அதை
சென்னை, 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை பெய்வது வழக்கம்.

அந்த வகையில் வடகிழக்கு பருவமழை காலம் நிறைவு பெற்றதாக கூறப்பட்டாலும், கிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வருவதால் பருவமழை இன்னும் நிறைவு பெறவில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

இதன் காரணமாகவருகிற 12-ந்தேதி வரை தமிழகத்தில் ஆங்காங்கே வடகிழக்கு பருவமழை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இந்த நிலையில் தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை இருக்கும் என்று ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

அவர்கள் கூறியது போல, தமிழகத்தில் நேற்று ஆங்காங்கே மழை பெய்தது. ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்தது. அந்தவகையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சீபுரம், விழுப்புரம் உள்பட சில மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

குறிப்பாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் இருந்தே மழை பெய்ய தொடங்கியது. நள்ளிரவில் லேசான மழையாக தொடங்கி அதிகாலையில் மிதமான மழையாக பெய்து வந்தது. நேரம் செல்ல செல்ல கனமழையாக கொட்டி தீர்த்தது.

சென்னை மற்றும் புறநகரின் முக்கிய பகுதிகளான எழும்பூர், அண்ணாநகர், கே.கே.நகர், கிண்டி, கோயம்பேடு, அண்ணா சாலை, பல்லாவரம், குரோம்பேட்டை, மீனம்பாக்கம், பட்டினப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், மந்தைவெளி, தியாகராயநகர், ஆதம்பாக்கம், வேளச்சேரி உள்பட பல இடங்களில் இடைவிடாமல் மழை பெய்தது.

சில பகுதிகளில் சீராக மழை பெய்து கொண்டே இருந்தது. இதனால் அந்த இடங்களில் இருந்த தாழ்வான பகுதிகள் வெள்ளக்காடாக மாறின. இதுபோல் சாலைகளின் இருபுறங்களிலும் தண்ணீர் தேங்கி இருந்தது. பல்வேறு இடங்களில் இருந்த சுரங்கப்பாதைகள் மழைநீரால் நிரம்பின. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

சென்னையில் இடைவிடாமல் பெய்த மழையால் சில தெருக்களில் குளம்போல் மழைநீர் தேங்கியது. அடுக்குமாடி குடியிருப்புகளின் தரைத்தளங்களில் முழங்கால் அளவுக்கு மழை நீர் சூழ்ந்து இருந்தது.

அதில் மோட்டார் சைக்கிள் கள் மூழ்கியபடி நின்றதையும் பார்க்க முடிந்தது. வீடுகளை சுற்றிலும் மழைநீர் வெள்ளக் காடாக காட்சியளித்ததால் பொதுமக்கள் பலரும் வீடுகளுக்குள் முடங்கினர்.

சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு உள்ளானார்கள். வாகனங்கள் தத்தளித்தபடி ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றன. பகல் நேரத்திலும் மழை காரணமாக கருமேகங்கள் சூழ்ந்து இருந்ததால், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே சென்றனர். சில இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றதை பார்க்க முடிந்தது.

காலையில் அலுவலக பணிக்கு சென்ற பொதுமக்கள் பலரும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் நனைந்தபடி சென்றனர். பல இடங்களில் தேங்கியிருந்த மழைநீரில் சென்ற மோட்டார் சைக்கிள்கள் பழுதானதால், அவற்றைதள்ளிச்சென்ற காட்சியும் அரங்கேறியது.

நேற்று காலை 9 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரையிலான நிலவரப்படி, அதிகபட்சமாக தரமணியில் 11 செ.மீ. மழை பதிவாகி இருந்தது. அதற்கு அடுத்தபடியாக மீனம்பாக்கத்தில் 10 செ.மீ., தாம்பரம் 9 செ.மீ., அண்ணா பல்கலைக்கழகம் 8 செ.மீ., வடசென்னை மற்றும் பூந்தமல்லி தலா 7 செ.மீ., நுங்கம்பாக்கம் 6 செ.மீ. உள்பட சில இடங்களில் குறைந்த நேரத்தில் அதிக மழை பதிவாகியிருந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்றும் (புதன்கிழமை) வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே கனமழை காரணமாக செம்பரம்பாக்கம், புழல் மற்றும் பூண்டி ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. எனவே பாதுகாப்பு கருதி செம்பரம்பாக்கம் அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டது.

இதேபோல் புழல் ஏரியில் இருந்து 1,500 கன அடி நீரும், பூண்டி ஏரியில் இருந்து 2 ஆயிரத்து 970 கனஅடி நீரும் நேற்று திறந்து விடப்பட்டது. 3 ஏரிகளில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்