கொரோனா தடுப்பூசி குறித்து சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பினால் நடவடிக்கை - அமைச்சர் விஜயபாஸ்கர்

கொரோனா தடுப்பூசி குறித்து சமூகவலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

Update: 2021-01-13 23:00 GMT
திருச்சி, 

திருச்சியில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 16-ந்தேதி தடுப்பூசி போடும் நிகழ்வை தொடங்கி வைக்கிறார். தமிழகத்துக்கு கோவி‌ஷீல்டு, கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிக்கு ஒப்புதல் வந்துள்ளது. கோவி‌ஷீல்டு 5 லட்சத்து 36 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னைக்கு வந்தது. தமிழ்நாட்டில் முதல் கட்டமாக 6 லட்சம் முன்களபணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.

முதல் தடுப்பூசி போட்டு 28-வது நாளில் 2-வது தடுப்பூசி போட வேண்டும். 2-வது தடுப்பூசி போட்டு 14 நாட்களுக்கு பிறகு தான் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும்.

கொரோனா தடுப்பூசி குறித்து தவறான தகவல்களை சமூகவலைத்தளங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும். மத்திய மருந்து கட்டுப்பாட்டுத்துறையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த தடுப்பூசிகளை எந்த அச்சமும் இல்லாமல் மக்கள் போட்டு கொள்ளலாம். சந்தேகம் இருந்தால் நானே போட்டு கொள்வேன். ஆனால் விதிமுறைப்படி நான் போட்டு கொள்ள முடியாது. முதலில் முன்களபணியாளர்களுக்கு தான் போட வேண்டும். அவசியம் ஏற்பட்டால் அனுமதி பெற்று நானே போட்டு கொள்கிறேன். அதில் எந்த மாற்றமுமில்லை.

தடுப்பூசி போடப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள். ஆனால் அவர்கள் கண்காணிப்பு அறையில் 30 நிமிடம் காத்து இருக்க வேண்டும். ஒருவேளை ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் கூட அதை எதிர்கொள்ளவும் டாக்டர்கள், நர்சுகள் பயிற்சி பெற்று தயார் நிலையில் உள்ளனர். மதுஅருந்திவிட்டு தடுப்பூசி போடக்கூடாது. அந்த நேரத்தில் மதுவை தவிர்த்து விட வேண்டும். தமிழகத்தில் 10 சதவீதமாக இருந்த கொரோனா வைரஸ் நோய் பாதிப்பு தற்போது 1.2 சதவீதமாக மாறி இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்