நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை

நெய்வேலியில் என்.எல்.சி. அதிகாரி வீட்டில் ரூ.10 லட்சம் நகை, பணம் கொள்ளை

Update: 2021-01-16 13:04 GMT
நெய்வேலி,

கடலூர் மாவட்டம் நெய்வேலி 19-வது வட்டம் ராஜாஜி சாலை என்.எல்.சி. குடியிருப்பில் வசித்து வருபவர் செல்வகுமார்(வயது 54).

இவர் என்.எல்.சி. 2-வது சுரங்கத்தில் மனிதவளத்துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் செல்வகுமார் கடந்த 12-ந்தேதி தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார்.

ரூ.10 லட்சம் கொள்ளை

பின்னர் நேற்று முன்தினம் இரவு அனைவரும் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன. மேலும் பின்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த செல்வக்குமார் குடும்பத்தினர், பீரோவை சோதனை செய்து பார்த்தபோது, அதில் வைத்திருந்த 29¾ பவுன் நகைகள், ரூ.75 ஆயிரம் ரொக்கம், 3 வெள்ளிக்கொலுசுகள் ஆகியவற்றை காணவில்லை. வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. கொள்ளை போன நகை-பணத்தின் மதிப்பு ரூ.10 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

வலைவீச்சு

பின்னர் இதுகுறித்து செல்வக்குமார் நெய்வேலி டவுன்ஷிப் போலீசில் தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டு அங்கிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் விழுப்புரத்தில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு மர்மநபர்களின் தடயங்களை சேகரித்து சென்றனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

என்.எல்.சி. அதிகாரி வீட்டில் நகை-பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்