தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வருகிறது: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை இன்று (செவ்வாய்கிழமை) முதல் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

Update: 2021-01-18 22:30 GMT
கோப்புப்படம்
சென்னை, 

இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வழக்கமாக டிசம்பர் மாதத்துடன் நிறைவடையும் இந்த பருவமழை, இந்த ஆண்டு வடகிழக்கில் இருந்து தொடர்ந்து காற்று வீசி வந்ததால் மேலும் 10 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வந்தது. தொடர்ந்து வடகிழக்கு பருவமழை கடந்த 18-ந் தேதி வரை 18 நாட்கள் நீடித்தது.

இந்த நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை நிறைவடையும் நிலையை எட்டியிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் நா.புவியரசன் கூறியதாவது:-

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து வரும் 48 மணி நேரத்திற்கு பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். குறிப்பாக 20-ந் தேதி (புதன்கிழமை) மற்றும் 21-ந் தேதி (வியாழக்கிழமை) ஆகிய நாட்களில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடனும், காலை நேரங்களில் லேசான பனிமூட்டமும் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசும் (86 டிகிரி பாரன்ஹீட்), குறைந்த பட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை (69 டிகிரி) ஒட்டியும் இருக்கும்.

கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பதிவாகி உள்ளது. அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம், மைலாடியில் தலா 2 சென்டி மீட்டர் என்ற அளவில் மழை பதிவாகி உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தவரையில், தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

வடகிழக்கு பருவமழையானது தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் இன்று (செவ்வாய்கிழமை) முதல் நிறைவடைவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்று அவர் கூறினார்.

இயல்பை விட அதிக மழை

வடகிழக்கு பருவ மழை நீடித்த கடந்த 1-ந் தேதியில் இருந்து கடந்த 18-ந் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதலாகவே மழை பதிவாகி உள்ளது. குறிப்பாக சென்னையில் இயல்பு மழை 19.8 மில்லி மீட்டர், ஆனால் பெய்தது 194.4 மில்லி மீட்டராகும். அதேபோல் காஞ்சீபுரத்தில் இயல்பு மழை 11.7, பெய்தது 100.7. செங்கல்பட்டு இயல்பு 14.2, பெய்தது 164.3., திருவள்ளூர் இயல்பு 15.7, பெய்தது 127.5. மதுரை இயல்பு 9.4, ஆனால் பெய்தது 131.2, திருச்சி இயல்பு 10, பெய்தது 137.1. கோவை இயல்பு 7.6, பெய்தது 96.9. நெல்லை இயல்பு 31.4, பெய்தது 374.3.

இவ்வாறு அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்