விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு - தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

Update: 2021-01-18 22:31 GMT
கோப்புப்படம்
சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் கடுமையான கனமழையின் காரணமாக திறந்து விடப்பட்ட அணைகளின் மூலம் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, விவசாயிகள் சாகுபடி செய்த பயிர்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. மேலும் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மக்களின் சகஜ வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.8 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்க தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இது யானைப் பசிக்கு சோளப் பொரி வழங்குவதற்கு ஒப்பாகும். விவசாயிகளின் நஷ்டத்தை மதிப்பீடு செய்யும்போது ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் ரூ.40 ஆயிரம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கனமழையால் 14 மாவட்டங்களுக்கு மேல் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி உள்ளன. போர்க்கால அடிப்படையில் விவசாயிகளின் பாதிப்பை வருவாய்த்துறை மற்றும் விவசாயத்துறை அதிகாரிகள் மூலம் மதிப்பீடு செய்து இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை தமிழக முதல்-அமைச்சர் எடுக்கவேண்டும என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்