சட்டமன்ற தேர்தலில் இரட்டை இலையில் போட்டியிட தயார் - கருணாஸ் எம்.எல்.ஏ

சட்டமன்ற தேர்தலில் 2 சீட்டுகள் கேட்க உள்ளோம் என்றும், இரட்டை இலையில் போட்டியிட தயார் என்றும் கருணாஸ் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-24 08:21 GMT
கோப்புப்படம்
காங்கயம், 

திருப்பூரில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது. இதில் முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவனரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கலந்து கொண்டார். 

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “மூத்த குடியான தமிழகத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட முக்குலத்தோருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கிறோம். தேர்தல் நெருங்க இருக்கின்ற சூழ்நிலையில் அதிமுக எங்களைப் போன்ற சிறிய அமைப்புகள் கட்சிகளை அழைத்து தொகுதி பங்கீடு நடத்தும், கடந்த முறை ஒரு சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்ற எங்களுக்கு தற்போது இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் வேண்டும் என்று கேட்போம். இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட தயார் 

முக்குலத்தோர் புலிப்படை கட்சி எந்த அமைப்பிற்கும் ஜாதிக்கும் எதிரானவர்கள் அல்ல, அவரவர் ஜாதிக்கான உரிமையை கேட்பது அதனை மாநில அரசு வழங்குவதும் வரவேற்கத்தக்கது. வன்னியர்களுக்கு 20 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கினால், முக்குலத்தோரின் 50 ஆண்டு கால கோரிக்கையான மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வேண்டும் என்ற அரசாணையை நடைமுறைப்படுத்த வேண்டும். 

சசிகலா விடுதலையான பிறகு அரசியலில் அவரது நிலைப்பாட்டை அறிவிப்பார். அரசியலை தவிர அவருக்கு வேறு ஒன்றும் தெரியாது. ஹீரோக்கள் அரசியலில் காமெடியன்கள் ஆகும் போது, சினிமாவில் காமெடியனான நான், அரசியலில் ஹீரோ ஆகியுள்ளேன்” என்று கூறினார்.

மேலும் செய்திகள்