ஜெயலலிதா நினைவிட திறப்பு விழா: அ.தி.மு.க.வினர் திரண்டதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்காக சென்னை வந்தவர்கள் வாகனங்களில் ஊர் திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Update: 2021-01-27 16:53 GMT

சென்னை

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்கு சென்னை மெரீனாவில் 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ.80 கோடி செலவில் நினைவிடம் கட்டப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இதற்கான பணிகள் நடைபெற்று வந்த நிலையில், இன்று நினைவிடம் திறக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்துவைத்தார். துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், அமைச்சர்கள் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.

ஜெயலலிதா நினைவிடம் திறப்பையொட்டி சென்னை மெரீனாவில் கொரோனா அச்சத்தையும் மீறி, அதிமுக தொண்டர்கள் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். காமராஜர் சாலையில் போர் வீரர்கள் நினைவு சின்னத்தில் இருந்து கண்ணகி சிலை வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நிகழ்ச்சி முடியும் வரை இந்த தடை நீடிக்கும். எந்த வாகனமும் அனுமதிக்கப்படமாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சென்னை மெரீனா மற்றும் சுற்றுப்பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காவல்துறையினர் ஆயிரக்கணக்கானோர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நிகழ்ச்சி முடிந்து அதிமுகவினர் பொதுமக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தைக் காண வரிசையாக அனுப்பப்படுகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்காக சென்னை வந்தவர்கள் வாகனங்களில் இன்று ஊர் திரும்புவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை வாகன நெரிசலால் ஸ்தம்பித்துள்ளது.

மேலும் செய்திகள்