வன்னியர்கள் உள்ஒதுக்கீடு விவகாரம்: முதலமைச்சர் நல்ல முடிவை அறிவிப்பார் என நம்புகிறோம் - டாக்டர் ராமதாஸ்

வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார் என்று டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Update: 2021-01-27 19:26 GMT
சென்னை,

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ம.க. கோரிக்கை தொடர்பான சந்தேகங்கள் மற்றும் அதற்கான விளக்கங்கள் குறித்த கருத்தரங்கம் வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் இணையவழியில் நேற்று நடந்தது. இந்த கருத்தரங்கை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. முன்னிலை வகித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் டாக்டர் ராமதாஸ் மற்றும் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. ஆகியோர் கூறியதாவது:-

தமிழகத்தில் 40 ஆண்டுகளாக வன்னியர்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி பல்வேறு போராட்டங்களை நடத்தியதுடன், அரசிடமும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதனடிப்படையில் 32 ஆண்டுகளுக்கு முன்பு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள சாதிகளுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வாங்கி தந்தோம். இந்த பட்டியலில் 80 சதவீதம் வன்னியர்களே உள்ளனர். யாருக்கும் பாதகம் இல்லாததால் வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்கலாம். தேர்தல் நேரத்தில் கேட்பதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் அவ்வாறு இல்லை. கடந்த 3 ஆண்டுகளாக முதல்-அமைச்சரை நேரடியாகவும், கடிதம் மூலமாகவும் கேட்டு வருகிறோம்.

சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தாமல், 1932-ம் ஆண்டு புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் பிற மாநிலங்களில் உள்ள சாதிகளுக்கு உள்ஒதுக்கீடு வழங்கப்பட்டு உள்ளது. அதேபோன்றுதான் இங்கும் வழங்க அறிவுறுத்துகிறோம். அதேநேரம் சாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சாதிகளுக்கும் மக்கள் தொகையின் அடிப்படையில் துல்லியமாக கணக்கிட்டு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து உள்ளோம்.

அரசு நியமித்துள்ள குலேசேகரன் ஆணையம் 69 சதவீதம் இடஒதுக்கீட்டை பாதுகாக்கவே அமைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசால் கடந்த ஆண்டு ஜூலை 8-ந் தேதி நியமிக்கப்பட்ட நீதிபதி தணிகாசலம் தலைமையிலான ஆணையத்துக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவை பிரித்து அரசுக்கு அறிக்கை வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தணிகாசலத்தின் ஆணையம் வழங்கும் பரிந்துரையே உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு போதுமானது.

உள்ஒதுக்கீடு எத்தனை சதவீதம் என்பது பரமரகசியமாகவே இருக்கட்டும். அமைச்சர்களிடம் அமர்ந்து பேசிய பின்னர் நாங்கள் முடிவெடுத்து கொள்கிறோம். இந்த விவகாரத்தில் வருகிற 31-ந் தேதிக்கு முன்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நல்ல முடிவை அறிவிப்பார் என்று முழுமையாக நம்புகிறேன். 

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்