சேலத்தில், அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து கைதி தற்கொலை - தாய், பெரியம்மாவை கொலை செய்தவர்

தாய், பெரியம்மாவை கொலை செய்த வழக்கில் கைதான தொழிலாளி சேலம் அரசு ஆஸ்பத்திரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-01-27 20:16 GMT
சேலம்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் காட்டுகொல்லை பூசாரி கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன். விவசாயி. இவரது மகன் முத்துவேல் (வயது30). இவர் சொத்து பிரச்சினையில் கடந்த 2018-ம் ஆண்டு தனது தாய் கவுரியையும், கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது பெரியம்மா துளசியையும் கொலை செய்தார்.

சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவரை உறவினர்கள் யாரும் அவரை சிறைக்கு வந்து பார்க்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர் விரக்தியில் இருந்து வந்துள்ளார்.

இந்தநிலையில் கடந்த 16-ந்தேதி காலை சிறையில் அடைக்கப்பட்ட அறையில் இருந்து வெளியில் வந்த அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக திடீரென்று சிறை மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் இடுப்பு மற்றும் கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு அவர் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கு அவருக்கு 2-வது மாடியில் எலும்பு முறிவு சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இதனிடையே முத்துவேல் நேற்று அதிகாலை 4.30 மணி அளவில் சிறுநீர் கழிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதனால் பாதுகாப்பிற்கு இருந்த சிறை வார்டன் ஒருவர் அவரை கழிவறைக்கு அழைத்து சென்று உள்ளார். அப்போது, முத்துவேல் திடீரென கழிவறை ஜன்னல் வழியாக கீழே குதித்து விட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

மேலும் செய்திகள்