சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் பிரசார இயக்கம் கே.எஸ்.அழகிரி தொடங்கி வைத்தார்

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழக காங்கிரஸ் ஊடகப்பிரிவு சார்பில் தேர்தல் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதனை கே.எஸ்.அழகிரி நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-09 23:30 GMT
சென்னை, 

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் ஊடகத்துறை சார்பில், ‘இந்தியாவை, ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரசில் இணைவோம்' என்ற தேர்தல் பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று நடைபெற்றது.

விழாவுக்கு தமிழக காங்கிரஸ் ஊடகத்துறை தலைவர் கோபண்ணா தலைமை தாங்கினார். அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய்தத், சமூக ஊடகத்துறை ஒருங்கிணைப்பாளர் ஹசீபா அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பிரசார இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

முடிவில் கே.எஸ்.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-

முழுமையான பலன் கிடைக்கும்

தமிழக அரசு ரூ.5 லட்சம் கோடி கடனில் திவாலாகி இருக்கும் நிலையில் தேர்தல் நாடகமாக விவசாயிகளுக்கான கடன் ரத்து அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார்.

கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடனை ரத்து செய்த அ.தி.மு.க. அரசு மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்தி தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனையும் ரத்து செய்தால்தான் விவசாயிகளுக்கு முழுமையான பலன் கிடைக்கும்.

முற்றுகை போராட்டம்

எடப்பாடி பழனிசாமி மீதான சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள தடையை நீக்க சி.பி.ஐ. நடவடிக்கை எடுக்காததை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் இந்த மாத இறுதியில் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்