தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியீடு

தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை 3 பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2021-02-10 03:34 GMT
சென்னை,

கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. அதன் பிறகு படிப்படியாக தளர்வுகள் அனுமதிக்கப்பட்டு தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் மட்டும் தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. 

இதை தொடர்ந்து கடந்த 8 ஆம் தேதி 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்களுக்கு முக கவசம், உடல் வெப்ப பரிசோதனை, சானிடைசர் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து வகுப்புகளை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.

இதற்கிடையில் பாடங்களை நடத்துவதற்கான காலம் மிக குறைந்த அளவில் இருப்பதால், பாடத்திட்டத்தை குறைக்க வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று தமிழக பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை வெளியிட்டிருந்தது .

இந்த நிலையில் தற்போது 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, 3 பருவத்திற்குமான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தினை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இதன்படி 2020-21ம் கல்வி ஆண்டிற்கான பாடத்திட்டங்கள் 50% வரை குறைக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்