கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய விவசாய கடன் ரத்து தொடங்கியது எடப்பாடி பழனிசாமி சான்றிதழ்களை வழங்கினார்

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சான்றிதழ்கள் வழங்கி நேற்று தொடங்கி வைத்தார்.

Update: 2021-02-14 04:30 GMT
சென்னை, 

பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக தமிழக அரசு நேற்று ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அறிவிப்பு

சாகுபடி பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள பெருத்த சேதத்தை கருத்தில் கொண்டு, நிலுவையில் உள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று விவசாயிகள், பல்வேறு விவசாய சங்கங்கள், கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த 5-ந் தேதி சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், ‘தற்போதுள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு, கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் கடன் நிலுவைத்தொகையான 12 ஆயிரத்து 110 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்படும்’ என்று அறிவித்தார்.

அரசாணை வெளியீடு

அந்த அறிவிப்பின்படி, பயிர்க்கடனை தள்ளுபடி செய்து 8-ந் தேதியன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையால் அரசாணைகள் வெளியிடப்பட்டன.

கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்று கடந்த ஜனவரி 31-ந் தேதி நிலுவையில் உள்ள 16 லட்சத்து 43 ஆயிரத்து 347 விவசாயிகளின் 12 ஆயிரத்து 110.74 கோடி ரூபாய் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை செயல்படுத்தும் வகையில், நேற்று 9 விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்களை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கி, கடன் தள்ளுபடி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பங்கேற்றோர்

இந்த நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் கே. ராஜூ, கே.பி.அன்பழகன், தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தயானந்த் கட்டாரியா, வேளாண்மை துறை முதன்மைச்செயலாளர் ககன்தீப் சிங் பேடி,

கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் இல.சுப்பிரமணியன், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கித்தலைவர் ஆர்.இளங்கோவன், தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் ஆர்.ஜி. சக்திசரவணன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்