பாரதியார், அவ்வையார் பாடல்களை கூறி தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் பகல் கனவு காண்கிறார் கே.எஸ்.அழகிரி விமர்சனம்

பாரதியார், அவ்வையார் பாடல்களை கூறி தமிழக மக்களை ஏமாற்றி விடலாம் என்று பிரதமர் பகல் கனவு காண்கிறார் கே.எஸ்.அழகிரி விமர்சனம்.

Update: 2021-02-15 01:46 GMT
சென்னை, 

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் சேவையை தொடங்கி வைப்பதற்காக சென்னைக்கு வருகை புரிந்த பிரதமர் நரேந்திர மோடி இலங்கை தமிழர்களின் உரிமைகளை காப்போம்; இந்திய மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வோம் என்று பேசியிருக்கிறார். அதேபோல, மீனவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லையென்று பிரதமர் பேசியிருக்கிறார்.

கடந்த ஜனவரி இறுதியில் ராமநாதபுரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கிறார்கள். இந்த படுகொலைக்குக் காரணமான இலங்கை கடற்படையினர் மீது நடவடிக்கை எடுக்க பா.ஜ.க. அரசு தயாராக இல்லை. இதைவிட மீனவர் விரோதப் போக்கு வேறு என்ன இருக்க முடியும்?

இந்தியாவிலேயே பா.ஜ.க. கால் ஊன்ற முடியாத மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதால் பாரதியார், அவ்வையார் கவிதை வரிகளை கூறி, தமிழ் மக்களை ஏமாற்றிவிடலாம் என்று பிரதமர் பகல் கனவு காணுகிறார். தமிழர்களுக்கு விரோதமாக பல்வேறு நடவடிக்கைளை எடுத்திருக்கிற பிரதமர் விரித்திருக்கிற மாயவலையில் மடியில் கனம் உள்ள காரணத்தால் அ.தி.மு.க.வினர் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சுயமரியாதையும், மானமும் உள்ள தமிழர்கள் ஒருபோதும் மோடியின் மாயவலையில் சிக்கமாட்டார்கள்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்