தென் மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: ராகுல்காந்தி 27-ந் தேதி தமிழகம் வருகை கே.எஸ்.அழகிரி தகவல்

ராகுல்காந்தி வருகிற 27-ந் தேதி தமிழகம் வருகிறார் என்றும், தென்மாவட்டங்களில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் என்றும் கே.எஸ்.அழகிரி தெரிவித்து உள்ளார்.

Update: 2021-02-16 05:34 GMT
சென்னை, 

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வருகிற 27, 28, மார்ச் 1-ந் தேதி ஆகிய 3 நாட்களில் தென்மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டகளில் 3 தினங்கள் மக்கள் பிரச்சினைகளை மக்களோடு கலந்து ராகுல்காந்தி பேசுகிறார். பொதுக்கூட்டங்களில் பேசுகிறார். பல்வேறு தரப்பட்ட மக்கள் இடையே கலந்துரையாடுகிறார். இதன் மூலம் தென்மாவட்ட மக்களோடும், தமிழக மக்களோடும் அவர் இரண்டற கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகி இருக்கின்றன. இந்த சுற்றுபயணத்தின் போது கூட்டணி கட்சியினர் கலந்து கொள்ள மாட்டார்கள்.

பிரியங்கா வருகை

அதற்கு பின்னர், அமைக்கப்படும் அனைத்து கட்சிகளுக்கான பிரசார மேடையில் கூட்டணி தலைவர்கள் கலந்து கொள்வார்கள். பிரியங்கா காந்தியும், தமிழகத்திற்கு பிரசாரம் செய்ய வருவார்.

போராட்டம் நடத்தும்

டீசல், பெட்ரோல், சமையல் எரிவாயு விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கிறது. கடந்த 6 ஆண்டுகளில் மோடி ஆட்சியில் மட்டும் சமையல் எரிவாயு விலை ரூ.373 உயர்ந்திருக்கிறது. இதற்கு எதிராக ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் எழுச்சியாக பேசியிருக்கிறார். மார்ச் மாதத்தில் இதற்கான போராட்டத்தை தமிழகத்தில் காங்கிரஸ் நடத்தும்.

ஆளும் கட்சியினருக்கு பெரும் தொகை

தமிழகத்தில் விவசாயிகள் கூட்டுறவு வங்கிகள் மூலம் பெற்றுள்ள ரூ.12,110 கோடி தள்ளுபடி செய்யப்பட்டதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். இதில் தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்குகிற காவிரி டெல்டா விவசாயிகள் வாங்கிய கடனில் தள்ளுபடி செய்யப்பட்ட தொகை ரூ.1,124 கோடி மட்டுமே. ஆனால், சேலம், ஈரோடு மாவட்டங்களுக்கு மட்டும் ரூ.2,400 கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இதை பார்க்கிறபோது ஆளுங்கட்சியினர் விவசாயிகள் பெயரில் மிகப்பெரும் தொகையை கடனாக பெற்று கடன் ரத்து மூலம் சலுகை அடைந்துள்ளனர். இதன்மூலம் பாரபட்சமான நடைமுறையை அ.தி.மு.க. கையாண்டு இருப்பதாக குற்றம் சாட்டுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்