மார்ச் 1 ம் தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வருகை

மார்ச் 1 ம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி நிறைவடைந்த திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2021-02-18 15:49 GMT
சென்னை: 

 தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காகவும், முடிவுற்ற பணிகளை தொடங்கி வைப்பதற்காகவும் பிரதமர் மோடி கடந்த 14-ம் தேதி சென்னை வந்தார். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, விழா மேடையில் இருந்த படி ரூ.3770 கோடியில் சென்னை, வண்ணாரப்பேட்டை - விம்கோ நகர் இடையே மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மோடி கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

மேலும், ரூ.293.4 கோடியில் சென்னை கடற்கரை அத்திப்பட்டு 4 வது வழித்தடம் மற்றும் விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர் ஒரு வழிப்பாதை மின்மயமாக்குதல் திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆவடி பீரங்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட எம்.பி.டி. அர்ஜுன் எம்.கே.1ஏ, பீரங்கி கவச வாகனத்தை ராணுவத்திடம் பிரதமர் மோடி ஒப்படைத்தார். மேலும், ரூ.2,640 கோடியில் கல்லணை கால்வாய் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தும் திட்டம், ரூ.1000 கோடியில் சென்னை இந்திய தொழில்நுட்ப கழக டிஸ்கவரி வளாகம் ஆகியவற்றிற்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, சென்னை விமான நிலையம் சென்ற அவர், தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி புறப்பட்டு சென்றார்.

இந்நிலையில்,  மார்ச் 1-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி மீண்டும்  தமிழகம் வருகிறார். தமிழக வருகையின்போது பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். திட்டங்களை தொடங்கி வைத்தபின் பொதுக்கூட்டத்திலும் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்