முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது 2-வது ஊழல் புகார் பட்டியல்; மு.க.ஸ்டாலின் சார்பில் கவர்னரிடம் துரைமுருகன் வழங்கினார்

முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மீது 2-வது ஊழல் புகார் பட்டியலை தமிழக கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் சார்பில் துரைமுருகன் வழங்கினார்.

Update: 2021-02-19 20:32 GMT
2-வது ஊழல் புகார் பட்டியல்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 7 அமைச்சர்கள் மீது 97 பக்கங்கள் அடங்கிய ஊழல் புகார் பட்டியலை தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித்திடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கடந்த டிசம்பர் மாதம் 22-ந்தேதி வழங்கினார்.

இந்தநிலையில் தி.மு.க.பொதுசெயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, செய்திதொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு நேற்று மாலை 5.15 மணியளவில் வந்தனர். கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சார்பில் 15 பக்கங்கள் அடங்கிய 2-வது ஊழல் புகார் பட்டியலை அளித்தனர்.

முதல்-அமைச்சர், 4 அமைச்சர்கள், ஒரு எம்.எல்.ஏ.
இந்த ஊழல் புகார் பட்டியலில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கே.சி.கருப்பண்ணன், கே.டி.ராஜேந்திர பாலாஜி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி மற்றும் அந்தியூர் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கே.ஆர்.ராஜாகிருஷ்ணன் ஆகியோர் பெயர் இடம் பெற்றுள்ளது.

துரைமுருகன் பேட்டி

புகார் மனு அளித்த பின்னர் துரைமுருகன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

கடந்த டிசம்பர் 22-ந்தேதி அன்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களின் ஊழல் புகார் குறித்து சட்டப்படி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளுக்கு பரிகாரம் காணப்படவில்லை என்று கவர்னரிடம் 7 அமைச்சர்களை பற்றி சுமார் 15 புகார் பட்டியல்களை கொடுத்தார். அதனைத் தொடர்ந்து இன்று (நேற்று) மீண்டும் ஆதாரத்துடன் கூடிய 9 புகார்கள் அடங்கிய பட்டியலை மு.க.ஸ்டாலின் சார்பில் கொடுத்து வந்திருக்கிறோம்.

கவர்னரின் உபசரிப்பில் எந்த குறையும் இல்லை. அரசியல் சட்டத்துக்குட்பட்டு எனக்கு இருக்கும் அதிகாரத்தின் படி நடவடிக்கை எடுப்பேன் என்று சொன்னார்.

மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு...
ஏற்கனவே நாங்கள் கொடுத்த பட்டியல் தூசிப்படியாமல், அதற்குரிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கையாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கவர்னர் அனுப்பி இருக்கிறார். அவர்கள் தேவைப்படும்போது எடுப்பார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்