புதுச்சேரியில், ஜனநாயக படுகொலையை நடத்தியிருக்கிறது, மத்திய அரசு - மு.க.ஸ்டாலின் அறிக்கை

‘‘புதுச்சேரியில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.'', என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

Update: 2021-02-23 05:40 GMT
சென்னை, 

திரைமறைவு அரசியல் பேரம் நடத்தி, ஜனநாயகத்தைப் பட்டப் பகலில் பச்சைப் படுகொலை செய்யும் படுபாதகச் செயலையே லட்சியமாகக் கொண்ட மத்திய பா.ஜ.க அரசு, மீண்டும் அதனைப் புதுச்சேரியில் அரங்கேற்றியிருக்கிறது. துணை நிலை கவர்னராக இருந்த கிரண் பெடியைக் கொண்டு, புதுச்சேரி யூனியன் பிரதேச மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி அரசின் உரிமைகளைப் பறித்ததுடன், மக்கள் நலத் திட்டங்கள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து முதல்-மந்திரி நாராயணசாமியும், கூட்டணியினரும் ஜனநாயக சக்திகளும் தொடர்ந்து போராடி வந்தன.

சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பிற மாநிலங்களில் செய்தது போலவே எம்.எல்.ஏ.க்களை விலை பேசும் குதிரை பேரம் நடத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு நெருக்கடி கொடுத்ததுடன், கிரண் பெடியை மாற்றிவிட்டு, தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை கூடுதல் பொறுப்பாக நியமித்தபோதே இதன் உள்நோக்கத்தைக் கண்டித்திருந்தேன்.

மிகவும் மோசமான -அரசியல் நாகரிகமற்ற அந்த உள்நோக்கத்தின் அடிப்படையில், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமல் -தாங்களாகவே நியமித்துக்கொண்ட உறுப்பினர்களுக்குப் பேரவையில் வாக்குரிமை உண்டு எனச் சொல்லியும், புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான அரசைக் கவிழ்த்திருக்கிறது பா.ஜ.க.

பா.ஜ.க.வின் மக்கள் விரோத செயல்பாடுகளையும், சட்ட அத்துமீறல்களையும் பேரவையில் எடுத்துரைத்து, தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்திருக்கிறார் நாராயணசாமி. ஜனநாயகம் காப்பதில் அவருடைய துணிச்சலான செயல்பாட்டை வாழ்த்துகிறேன். தமிழகத்துடன் இணைந்து, புதுச்சேரியும் தேர்தலைச் சந்திக்கவுள்ள நிலையில் ஜனநாயகப் படுகொலையை நடத்தியிருக்கிறது மத்திய பா.ஜ.க அரசு.

புதுச்சேரியில் தேர்தலைத் தள்ளிவைத்து, துணை நிலை கவர்னர் மூலம் மறைமுக ஆட்சி நடத்திட பா.ஜ.க. அரசு முயற்சித்தால் அதனை நீதிமன்றத்தில் சட்டரீதியாக எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகளில் தி.மு.க. துணை நிற்கும். அதிகார துஷ்பிரோயகம் செய்து சட்டமன்றங்களில் சடுகுடு ஆடலாம். மக்கள் மன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்காது. அதனால், இந்த ஜனநாயகப் படுகொலையை எதிர்த்து தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி மக்கள் மன்றம் செல்லும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான ஆட்சி கவிழ்ந்ததற்கு, மத்திய பா.ஜ.க. அரசுதான் காரணம் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத்தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்