ஈத்தாமொழி அருகே, நடுக்கடலில் விசைப்படகு-வள்ளம் மோதல் - தண்ணீரில் தத்தளித்த 5 பேர் மீட்பு; ஒருவரை தேடும் பணி தீவிரம்

ஈத்தாமொழி அருகே நடுக்கடலில் விசைப்படகு- வள்ளம் மோதிக்கொண்டன. இதில் இருந்த மீனவர்கள் கடலுக்குள் விழுந்தனர். தண்ணீரில் தத்தளித்த 5 மீனவர்கள் மீட்கப்பட்டனர். மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2021-02-23 06:02 GMT
ஈத்தாமொழி,

ஈத்தாமொழியை அடுத்த பொழிக்கரையைச் சேர்ந்தவர் சோர் தாமஸ் என்ற ரூபர்ட் (வயது 55). இவர் சொந்தமாக வள்ளம் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் மாலை சோர் தாமசுக்கு சொந்தமான வள்ளத்தில் ராஜாக்கமங்கலம்துறையை சேர்ந்த ஜோசப் (70), பிரான்சிஸ் (68), தாமஸ் (61), ரஞ்சித்குமார் (44), சிகாமணி (44), சிம்சன் ஆகிய 6 பேர் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் கடற்கரையில் இருந்து சுமார் 10 நாட்டிகல் கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

அந்த வழியாக வந்த குளச்சலைச் சேர்ந்த ஜெரின் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகு எதிர்பாராத விதமாக வள்ளத்தின் மீது பயங்கரமாக மோதியது. விசைப்படகு மோதிய வேகத்தில் வள்ளம் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் வள்ளத்தில் இருந்த 6 மீனவர்களும் கடலுக்குள் தூக்கி வீசப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தனர்.

இதைகண்டு அதிர்ச்சி அடைந்த விசைப்படகு மீனவர்கள் உடனே கடலில் குதித்து அவர்களை காப்பாற்ற முயன்றனர். இதில், ஜோசப்பை தவிர மற்ற 5 பேரையும் மீட்டனர். ஆனால், பல மணிநேரம் கடலில் தேடியும் ஜோசப்பை மீட்க முடியவில்லை.

பின்னர், தாங்கள் வந்த படகில் மீட்கப்பட்டவர்களுடன் கரைக்கு திரும்பினர். மாயமான மீனவர் ஜோசப்புக்கு மதேலா (60) என்ற மனைவியும், 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். மகள்களுக்கு திருமணமாகிவிட்டது. மகன் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.

இச்சம்பவம் பற்றி குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும், அந்த பகுதியில் உள்ள மீனவர்களின் உதவியுடன் ஜோசப்பை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

மீன்பிடிக்கச் சென்றபோது நடந்த இந்த விபத்தில் மீனவர் மாயமானதால் ராஜாக்கமங்கலம் மீனவ கிராமமே சோகத்தில் மூழ்கி உள்ளது.

மேலும் செய்திகள்