மாநில அரசு வரி காரணமல்ல: மத்திய அரசின் மேல்வரியால்தான் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது - நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தகவல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு மாநில அரசின் வரி காரணமல்ல, மத்திய அரசின் மேல்வரியால்தான் விலை உயர்ந்துள்ளது என்று தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கிருஷ்ணன் கூறினார். இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நிருபர்களுக்கு தமிழக நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே.கிருஷ்ணன் அளித்த பேட்டி வருமாறு:-

Update: 2021-02-24 03:49 GMT
சென்னை,

2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நடப்பு நிதியாண்டான 2020-21-ம் நிதியாண்டில், கொரோனா தொற்றினால் ஏற்பட்ட தாக்கங்கள், அதன் விளைவுகளை சமாளிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள், நிதிநிலையில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதனால் பொருளாதார வளர்ச்சி ஒரு கட்டத்தில் தொய்வு, வீழ்ச்சியைக் காணும் என்ற சந்தேகம் இருந்தது. ஆனாலும் கடந்த ஆகஸ்டுக்கு பிறகு அரசு எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால் இந்த நிதியாண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி 2.02 சதவீதமாக இருந்தது. இது நேர்மறையான வளர்ச்சியாகும்.

அரசுக்கு வரிகள் மூலம் வரும் வருவாய் 18 சதவீதம் குறைந்துள்ளது. அது குறைந்திருந்த நிலையில், கொரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், மூலதனச் செலவு குறையாமல் பராமரிக்க வேண்டிய கட்டாயம் ஆகிய சூழ்நிலைகளில் சில இனங்களில் செலவுகளை அரசு கட்டுப்படுத்தியது. இந்த நிதியாண்டில் செலவாக 2 லட்சத்து 40 ஆயிரம் கோடி என்று கணக்கிடப்பட்டது.

ஆனால் திருத்திய மதிப்பீட்டில் அதில் கூடுதலாக 6 ஆயிரம் கோடி உயர்ந்துள்ளது. எனவே வருவாய் கணக்கில் 6 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படும் நிலையில், மூலதனக் கணக்கில் ரூ.2 ஆயிரம் கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் தமிழகத்திற்கு வருவாய் மற்றும் நிதிப் பற்றாக்குறை அதிகரித்துள்ளன. மாநிலத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதம் வரை கடன் பெற மத்திய அரசு அனுமதித்துள்ளது. இந்த நிதியாண்டில் சிறப்பு காரணங்களுக்காக அதை 5 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. அதன்படி 95 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெறும் தகுதியைப் பெற்று இந்த நிதியாண்டை அரசு சமாளித்துள்ளது.

வரும் நிதியாண்டில் பொருளாதார நிலை சீரடைவதோடு, வரி வருவாய் உயரும் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து அரசு திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில், நடப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, புதிய வரிகள் விதிப்பு இல்லை.

மாநிலத்தின் கடன் அளவு என்பது வளரக்கூடியதுதான். அதோடு மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியும் ஏற்படும். ஒரு லட்சம் கோடி ரூபாயில் இருந்து 5 லட்சம் கோடி ரூபாயாக கடன் அளவு வளர்ந்ததாக கூறும்போது, அதோடு மாநிலத்தில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டும்.

15-வது நிதிக் கமிஷனின் உத்தரவுப்படி 29 சதவீதம் வரை மாநிலத்துக்கான கடனளவு உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடனளவு அந்த குறியீட்டுக்குள்தான் இருக்கிறது. அதுபோல மாநில ஒட்டுமொத்த உற்பத்தியில் 3 சதவீதத்துக்குள்தான் கடன் வாங்கப்பட்டுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம், மாநில அரசின் வரி விதிப்பு அல்ல. அவற்றின் மீதான வரியை மாநில அரசு, மக்களுக்கு சாதகமாக இருக்கக்கூடிய அளவுக்கு மாற்றியது. அதன் பிறகு, அவற்றின் மீதான மத்திய அரசின் வரியை அவர்கள் கணிசமாக உயர்த்தினர். கலால் வரி என்பதை ‘செஸ்’ வரி (மேல்வரி) என்று மாற்றினர். கலால் வரி என்றால் மாநிலங்களுக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும். செஸ் என்று மாற்றினால், அதை மாநிலங்களுக்குத் தர வேண்டியதில்லை.

அதனால் மத்திய அரசுக்கு 48 சதவீதம் வரி வருவாய் கூடியுள்ளது. ஆனால் மாநில அரசுக்கு வர வேண்டிய வருவாயில் 39 சதவீதம் குறைந்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்பதற்கு நான் பதிலளிக்க முடியாது. மத்திய அரசு விதித்த வரியால் தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

மத்திய வரி வருவாயில் இருந்து தமிழகத்துக்கு அரசு தர வேண்டிய பங்கின் அளவு குறைகிறது. வரியில் 41 சதவீதத்தை அதாவது 32 ஆயிரத்து 849 கோடி ரூபாயை தமிழகத்திற்குத் தர வேண்டும். அதை 23 ஆயிரத்து 39 கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துவிட்டது. மொத்தத்தில் தமிழகத்திற்கு வர வேண்டிய மாநில வரி வருவாயும், மத்திய அரசு தர வேண்டிய வரிப் பங்கும் குறைந்துவிட்டது. அதை ஈடு செய்வதற்காக கூடுதலாக கடன் பெற்று அனைத்து நலத்திட்டங்களையும் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு பயிர்க்கடன் ரூ.12 ஆயிரம் கோடி தள்ளுபடி என்று அறிவித்துவிட்டு, பட்ஜெட்டில் அதை ரூ.5 ஆயிரம் கோடி என்றளவில் மட்டும் காட்டப்பட்டுள்ளதாக கேட்கிறீர்கள். 12 ஆயிரம் கோடி ரூபாயை சரி செய்வதற்கு 5 ஆண்டு காலம் அளிக்கப்படுகிறது. அதன்படி, தற்போது ரூ.2,500 கோடி ஒதுக்கினாலே போதும். ஆனால் நபார்டு வங்கிக்கு செலுத்த வேண்டிய தொகையையும் சேர்த்து இந்த பட்ஜெட்டில் ரூ.5 ஆயிரம் கோடியாக காட்டியிருக்கிறோம்.

இந்த நிதி ஆண்டில் (மார்ச் முடிவு வரை) டாஸ்மாக் மூலம் மது விற்பனை ரூ.30 ஆயிரம் கோடியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்