கோவை வந்த பிரதமர் மோடிக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசு வழங்கி வரவேற்பு

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமர் மோடிக்கு முதல் அமைச்சர் மற்றும் துணை முதல் அமைச்சர் பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கி வரவேற்றனர்.

Update: 2021-02-25 11:32 GMT
சென்னை,

புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கவும், தேர்தல் பிரசாரத்தை தொடங்கவும் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்னை வந்தடைந்தார்.

சென்னை வந்த பிரதமர் மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

இதனை தொடர்ந்து சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 10.20 மணியளவில் பிரதமர் மோடி புதுச்சேரிக்கு புறப்பட்டார்.  அங்கு அரசு நிகழ்ச்சிகள் மற்றும் பா.ஜ.க. கூட்டத்தில் கலந்து கொண்டார்.

புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்து விட்டு பிரதமர் மோடி கோவைக்கு புறப்பட்டார்.  இதற்காக சென்னை வந்த அவர், தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து கோவை சென்றார்.  கோவையில் பல்வேறு அரசு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் மோடியை முதல் அமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.  பிரதமருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவு பரிசையும் வழங்கினர்.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க வந்துள்ள பிரதமரை வரவேற்கிறேன் என்று முதல் அமைச்சர் பழனிசாமி கூறினார்.

இதேபோன்று துணை முதல் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், கோடிக்கணக்கான தமிழ் மக்கள் சார்பாக பிரதமரை வரவேற்கிறேன்.  கொங்கு மண்டலம் அ.தி.மு.க.வின் கோட்டை.  கோவையில் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் என கூறினார்.

இதன்பின்னர், எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் உருவ படத்திற்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் செய்திகள்