சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து; முதல் அமைச்சர் பழனிசாமி நிவாரணம் அறிவிப்பு

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல் அமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

Update: 2021-02-26 10:00 GMT
விருதுநகர்,

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்றில் நேற்று திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது.  இதில் பணியில் இருந்த தொழிலாளர்கள் பலர் சிக்கி கொண்டனர்.  இதுபற்றி தகவல் அறிந்து அருகே இருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.  இந்த வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.  6 பேர் காயமடைந்தனர்.

பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, வெடி 
விபத்து ஏற்பட்டது என்று கூறப்பட்டது.  இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

சமீபத்தில், சிவகாசி அருகே உள்ள அச்சன்குளம் கிராமத்தில் இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடிவிபத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

இதற்கு அடுத்த நாள் சிவகாசி அருகே உள்ள காக்கிவாடன்பட்டி கிராமத்தில் ராஜூ என்பவரின் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

இந்த சம்பவம் நடந்து ஒரே மாதத்திற்குள் 
சிவகாசி அருகே காளையார்குறிச்சியில் மற்றொரு பட்டாசு ஆலை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது அந்த பகுதியில் வசிப்போரிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், விருதுநகர் காளையார்குறிச்சி பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு முதல் அமைச்சர் பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

இதன்படி, வெடிவிபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.  விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் மற்றும் லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும்.

மேலும் செய்திகள்