தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் என அறிவிப்பு

தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

Update: 2021-02-27 11:44 GMT
சென்னை,

ஊதிய உயர்வு, காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசு போக்குவரத்து ஊழியர்கள் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி உட்பட 9 தொழிற்சங்கங்கள் பங்கேற்றிருந்தன. 

கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் போரட்டத்தால் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்பட்டன.  இதனால் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக தொடர்ந்தது.  போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக தொழிற்சங்க பிரதிநிதிகளை தொழிலாளர் நலன் ஆணையம் இன்று பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தது.

இதன்படி சென்னை டிஎம்எஸ் அலுவலகத்தில், தொழிலாளர் நல ஆணையர் லக்‌ஷ்மிகாந்த் தலைமையில் பிற்பகல் 3 மணியளவில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து, 3 நாட்களாக நடைபெற்று வந்த போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது என தொழிற்சங்க நிர்வாகிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.

மேலும் செய்திகள்